தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் மறைவு சிபிஐ(எம்) அஞ்சலி

தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டு, எழுத்தியல், தொல்லியல், மொழியியல் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் அவர்களது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பல ஆண்டு காலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றியவர்; பின்னர் தினமணி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையை சார்ந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தவர். இதுவரை கிடைத்துள்ள எழுத்துக்கள் எல்லாவற்றையும் விட தமிழ் பிராமி எழுத்துக்கள்தான் மிகப் பழமையானவை  என்பதை நிறுவியவர். தமிழ் பிராமி எழுத்துக்கள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கல்வெட்டுகள் குறித்து மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்காக மலைகள், குகைகள் என அனைத்து இடங்களுக்கும் அலைந்து ஆதாரங்களை சேகரித்தவர்.

சங்க காலம் குறித்து அவரது ஆய்வுகள் மிகச் சிறப்பானவை. சங்க காலத்தில் எவ்வாறு கல்வி பரவி இருந்தது எனவும் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் சமூகத்தில் பெண்கள் கல்வியில் எவ்வாறு சிறந்து விளங்கினர் என்பதையெல்லாம் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டு வந்தவர். அவரது பணியைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டத்தையும், செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தொல்காப்பியர் விருதினையும் வழங்கி கௌரவித்தன.

அவரது மறைவு தமிழச் சமூகத்திற்கும், தமிழ் மொழி ஆய்வு உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவிற்கும் அவரை இழந்து துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று ...