தலைமைச் செயலாளருக்கு‍ சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

12-08-2013

பெறுநர்:

          திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.,

          தலைமைச் செயலாளர்,

          தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,

          சென்னை – 600 009.

அன்புடையீர், வணக்கம்.

பொருள் :     தென்மாவட்ட கடலோரங்களில் கனிமவளங்கள் அடங்கிய மணல் கொள்ளை – தடுத்து நிறுத்தத் தலையீடு கோரி:

– – –

தமிழ்நாடு அரசாங்கம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இல்மனைட், ரூட்டைல் மற்றும் கார்னட் ஆகிய கனிமங்கள் அடங்கிய மணல் சட்டத்திற்கு புறம்பாக அள்ளப்படுவது குறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.

தூத்துக்குடி மட்டுமின்றி இத்தகைய கனிமங்கள் அடங்கிய மணல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும் அள்ளப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 இடங்களில் இந்த கனிமங்களை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகப்பெரும்பாலானவை ஒன்றிரண்டு நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு மற்றும் தனியார் நிலங்களில் இந்த கனிமங்கள் அடங்கிய மணலை அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பல லட்சக்கணக்கான டன் கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07 ஆம் ஆண்டு முதல் 2012-13 வரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மட்டும் 15 லட்சம் டன்னுக்கும் அதிகமான கனிமங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே செய்துள்ளன. இவற்றின் மதிப்பு பல பத்தாயிரம் கோடிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவை முழுவதையும் தனியார் நிறுவனங்களே மிகக்குறைந்த லீசுக்குப் பெற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, கடலரிப்பு, மீன்வள பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இதனால் பெற்ற கொள்ளை லாபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகங்களை மிஞ்சுபவர்களாகவும் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் லாப வேட்டைக்கு உடன்படாதவர்களை பந்தாடுகிறவர்களாகவும் வலிமை பெற்றுள்ளனர். சுருங்கச் சொல்வதெனில் இக்கனிம வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக தங்கள் ஆட்சியை நடத்துபவர்களாக இத்தகைய நிறுவனங்கள் மாறி வந்திருக்கின்றன. இதனால், அரசுக்கு சேர வேண்டிய வருவாய் பெருமளவுக்கு பாதிக்கப்படுகிறது. சட்டத்தின் ஆட்சிக்கு குந்தகம் விளைகிறது. சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுகிறது. கடலோர மக்களின் அமைதியும் வாழ்வாதாரமும் சீர்குலைக்கப்படுகிறது. இந்த கனிம வளங்கள் தோண்ட தோண்ட வளர்பவை அல்ல, குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்துபோகக் கூடியவை. எனவேதான், உச்சநீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் அரசாங்கம் இயற்கை வளங்களில் பாதுகாவலன் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு,

  1. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது இக்கனிம வளங்களுக்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
  2. இயற்கை வளங்களை தங்குதடையில்லாமல் தனியார் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்காமல் அரசே கனிம வளங்களை பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும். ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்.
  3. அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தாண்டி கனிமங்கள் அடங்கிய மணல் அள்ளப்பட்டிருந்தாலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஒரு இடத்தில் கனிமங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  4. இதனால், அரசு, மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
  5. இத்தகைய குவாரிகள் உள்ள மாவட்டங்களில் துணிவும் நேர்மையும் திறமையும் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்துவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் அந்த அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
  6. இப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளோரின் செல்வாக்கு, பணபலம் பல மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது முறைகேடுகளில் உள்ளாக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைத்து முறைகேடுகளை விசாரிக்கவும் எதிர்காலத்தில் தடுக்கவும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

தங்களன்புள்ள,

/- ஒப்பம்

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...

Leave a Reply