தாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்!

இந்தியா ஒரே நாடுதான். ஆனால் பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரே நாடு. இந்தியா எனும் நந்தவனத்தில் பல மொழிகள் எனும் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. நந்தவனத்தின் அழகு எப்படி அதன் பலவண்ண, பலவகை மலர்களில் இருக்கிறதோ அப்படி இந்தியாவின் வனப்பும் வலிவும் அதன் பன்மைத் தன்மையில் இருக்கிறது.

மத்தியில் மீண்டும் வந்திருக்கிற பாஜக ஆட்சியோ ஒரே நாடு எனும் உடலைக் காண்பித்து அதன் பன்மைத் தன்மை எனும் உயிரைக் கொல்லப் பார்க்கிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்று எங்கும் எதிலும் ஒற்றைத் தன்மையைத் திணிக்கிறது. “இந்து-இந்தி-இந்துஸ்தான்” என்பதே அதனது குருபீடமாகிய ஆர்எஸ்எஸ்சின் தாரக மந்திரம் என்பதை நினைத்துக் கொண்டால் இந்தத் திணிப்பின் நோக்கம் புரியும்.

மோடி அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை “இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகள் கற்பிக்கப்படும்” என்று கூறியது. தென்மாநிலங்களில் எழுந்த கடும் எதிர்ப்பிற்குப் பிறகு அந்த வாக்கியம் நீக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் அதே கொள்கையானது “மும்மொழித் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் கூறியுள்ளதை மறந்துவிடக் கூடாது. மும்மொழித் திட்டம் என்பது இந்தி திணிப்பு திட்டம்தான். அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட்டது, இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக அதற்கு நெருக்கமான சமஸ்கிருதம் சொல்லித்தரப்பட்டது. நடைமுறையில் அங்கெல்லாம் இந்தி, ஆங்கிலம் எனும் இருமொழிகள்தான். இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்குத்தான் இந்தி எனும் மூன்றாம் மொழிச் சுமை.

இந்தியை ஒருவர் விரும்பிக் கற்றுக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதை அரசு அனைவர் மீதும் திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. கல்வியில் அவரவர் தாய்மொழிக்கே முதல் உரிமை இருக்க வேண்டும். அத்தகைய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்; அதை அமுல்படுத்தும் அதிகாரம் மாநில அரசின் கையில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டுபோகப்பட்டது; இப்போதோ அதை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரும் வேலை நடக்கிறது.

இந்தப் பின்புலத்தில்தான் இந்தி திணிப்பைத் தீவிரப்படுத்துகிறது மோடி அரசு. “உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம் அதன் பொதுமொழியாம் இந்தியே” என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மத்திய அரசின் துறைகளில் எல்லாம் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தத் துறைகளின் பணியாளர் தேர்வுகள் பலவற்றில் பிற இந்திய மொழிகளுக்கு இடம் இல்லை. அந்த மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்கள் எல்லாம் அந்நிய மொழியாம் ஆங்கிலம் வழி எழுத வேண்டும். இந்தி மொழிக்காரர்களுக்கோ பிரச்னையே இல்லை. அவர்களின் தாய்மொழிதான் தேர்வு மொழி. இது இந்தியர்களை மொழியால் பாகுபடுத்தும் அநீதி.

அனைத்து மொழிக்காரர்களும் தரும் வரிப்பணத்திலிருந்து இந்திமொழி வளர்ச்சிக்குத்தான் மத்திய அரசு அதிக நிதி செலவழிக்கிறதே தவிர இதர மொழிகளுக்கு அல்ல. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் வளர்த்தெடுக்கிற பொறுப்பு தனக்கு இருப்பதாக மத்தியஅரசு நினைப்பதில்லை. மொத்தத்தில் அதனது இந்தி திணிப்பின் காரணமாக இதர தேசிய இனங்களின் தாய்மொழிகளுக்கு பாதுகாப்பு இல்லா சூழல் உருவாகியிருக்கிறது. இது இந்திய ஒற்றுமைக்கும், அதன் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் உகந்தது அல்ல.

இந்த அநியாயத்தைக் களைய கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியுள்ளது:

  • இந்தி திணிப்பை நிறுத்து!
  • இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காப்பாற்று!
  • எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழிகளாக்கு!
  • நாடாளுமன்றத்தில் அனைத்து மொழிகளிலும் பேச உடனுக்குடனான மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்து!
  • மத்திய அரசு துறைகளின் பணியாளர் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் நடத்து!
  • மாநிலங்களில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்து! இந்நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கு!
  • அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு உரிய நிதி வழங்கு!
  • கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்று!

இவற்றின்பால் மத்திய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவே தென்மாநிலங்களின் இந்த மாநாடு சென்னையில் நவம்பர் 5 அன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது இந்தியாவிற்கு ஒரு புதுமை. ஏதோ தமிழகம் மட்டுமே இந்தி திணிப்பை எதிர்ப்பதாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரத்தை இது தவிடுபொடியாக்கும். தாய்மொழிகளைக் காக்க இதோ பார், தென்னகமே எழுந்து நிற்கிறது என்று பறைசாற்றப் போகிறது இந்த மாநாடு. இதில் பங்கேற்பதும், ஆதரவு தருவதும் தாய்மொழிப் பற்றுள்ள ஒவ்வொருவரின் உரிமை, கடமை.

தாய்மொழிகள் பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு
தென்மாநிலங்களின் மாநாடு!

நவம்பர் 5, 2019 செவ்வாய் மாலை 5 மணி
காமராஜர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.

இசை நிகழ்ச்சி: “ஓராயிரம் குயில்கள்”

தலைமை: தோழர் கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு மாநில செயலாளர், சிபிஐ(எம்)

வரவேற்பு: தோழர் ஏ. பாக்கியம்
தென்சென்னை மாவட்டச்செயலாளர், சிபிஐ(எம்)

சிறப்புரை

தோழர் ஏ.விஜயராகவன்
ஒருங்கிணைப்பாளர், இடது ஜனநாயக முன்னணி – கேரளா
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தோழர் பி. மது
மாநிலச் செயலாளர், ஆந்திர மாநிலக்குழு, சிபிஐ(எம்)

தோழர் டி.வீரபத்ரம்
மாநிலச் செயலாளர், தெலுங்கானா மாநிலக்குழு, சிபிஐ(எம்)

தோழர் யு.பசவராஜ்
மாநிலச் செயலாளர், கர்நாடக மாநிலக்குழு, சிபிஐ(எம்)

திருமிகு மா. ராசேந்திரன்
முன்னாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

தோழர் கே.பாலபாரதி
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தீர்மானம் முன்மொழிவு: தோழர் சு.வெங்கடேசன் எம்.பி.,

நிகழ்வு ஒருங்கிணைப்பு: தோழர் பேரா. அருணன்

நன்றியுரை: தோழர் எல். சுந்தரராஜன்
வடசென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)


Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...