தாய்மொழி பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – தென் மாநிலங்களின் மாநாடு!

இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்திருக்கிறது.

நட்டின் விடுதலைக்குப் பின்னர் எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் மொழி பிரச்சனைக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. பல மொழி பேசும் மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் இந்தி மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவித்தது மட்டுமின்றி அம்மொழியை அனைத்து மாநிலங்களிலும் வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இந்தி திணிப்பைத் தீவிரப்படுத்துகிறது மோடி அரசு.“உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம் அதன் பொதுமொழியாம் இந்தியே” என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மத்திய அரசின் துறைகளில் எல்லாம் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த துறைகளின் பணியாளர்கள் தேர்வுகள் பலவற்றில் இந்தி தவிர பிற மொழிகளுக்கு இடமில்லை. அந்த மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்கள் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்தி உட்பட எந்தவொரு மொழியையும் விரும்பி கற்பது அவரவர் உரிமையாகும். ஆனால், இதர மொழி பேசும் மக்கள் மீது இந்தியை கட்டாயமாக திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்வி வரைவுக் கொள்கையின் மூலம் இந்தி கொல்லைப்புற வழியாக திணிக்கப்படுகிறது.

தாய்மொழி காப்பும், வளர்ப்பும் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். ஆனால், தாய்மொழிகள் புறந்தள்ளப்பட்டு இன்று ஆங்கிலம் கோலோச்சும் நிலைமை உள்ளது. இதற்கு மாறாக, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அனுதினமும் திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து அந்தந்த மாநிலத்தில் தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும், இந்தியை கட்டாயமாக திணிப்பதற்கு மாறாக, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவ அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் போராடிவந்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கமாகும்.“செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற மகாகவி பாரதியின் அனைத்து மொழிகளும் தேசிய ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட குரலெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தாய் மொழியை பாதுகாத்திடவும், இந்தி திணிப்பை எதிர்த்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “தாய்மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தென்மாநிலங்களின் மாநாடு” சென்னையில், 2019 நவம்பர் 5 அன்று மாலை 5.00 மணியளவில், காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழக வரலாற்றில் தென்னகமே எழுந்து நின்று இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் முதல் மாநாடு இது என்றால் மிகையாகாது.

இம்மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்கிறார். கேரள இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஏ.விஜயராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலச் செயலாளர் தோழர் பி.மது, தெலுங்கானா மாநிலச் செயலாளர் தோழர் டி.வீரபத்ரம், கர்நாடக மாநிலச் செயலாளர் தோழர் யு.பசவராஜ் மற்றும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமிகு. மா.ராசேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கே.பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சாகித்ய அகடாமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளருமான தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநாட்டு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுகிறார். முற்போக்கு எழுத்தாளரும், பேராசிரியருமான தோழர் அருணன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். இம்மாநாடு வெற்றி பெற அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...