திமுக தலைவரின் விருப்பம் நிறைவேறாது‍!

என் விருப்பத்தை வெளியிடுகிறேன் என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் முரசொலி ஏட்டில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக-சிபிஐ(எம்) வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசியதை மேற்கோள் காட்டி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுகவை படுதோல்வி அடையச் செய்வது நமது கடமை என்று நான் பேசியதை சுட்டிக்காட்டி, திராவிட முன்னேற்றக்கழகம் என்ன கொள்கை ரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறுபட்டதா? நூற்றுக்கு நூறு என்று இல்லாவிட்டாலும் நூற்றுக்கு 95 சதவீதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையும் திமுகவின் கொள்கையும் ஒன்றுதான் என்கிறபோது ஏன் திமுகவை எதிர்க்கவேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

ஒரு குறிப்பிட்ட தேசிய, மாநில அரசியல் சூழலில் தேர்தலில் பொது எதிரியை எதிர்ப்பதற்காக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளது. கூட்டாக இயக்கமும் நடத்தியுள்ளது. இதனாலேயே இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் வேறுபாடு இல்லை என்று கூறமுடியாது. பல்வேறு விஷயங்களில் திமுகவின் கொள்கை வேறு. மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை வேறு. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக்கொண்டது. அதே காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. அதற்கேற்ப மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. 

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று. இடதுசாரிகளின் ஆதரவுடன் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட முயன்றபோது, திமுக உள்ளிட்ட அக்கூட்டணிக்கட்சித் தலைவர்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். இடதுசாரி கட்சிகளின் கவலையில் நியாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியும் கூறினார். ஐமுகூ அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், அரசை ஆதரித்து அதன் மூலம் அமெரிக்க ஆதரவுக்கொள்கையை ஆதரித்து பதவியில் நீடித்ததுதான் திமுக. இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான் என்று கூறுவதை எப்படி ஏற்கமுடியும். 

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரின் நினைவாற்றல் அனைவரும் அறிந்த ஒன்று. மறைந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி 1971ஆம் ஆண்டு  இவரை பாராட்டி பேசியதை இன்றும் நினைவுகூர்கிறார். ஆனால்  1999ஆம் ஆண்டு திமுக மேற்கொண்ட அரசியல் நிலைபாட்டை மறந்துவிட்டாரா? வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில் அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்ற புதிய தத்துவத்தின் அடிப்படையில் மதவெறி பாஜக தலைமையிலான அரசை திமுக ஆதரித்தது. இந்த கடிதத்திலும் கலைஞர் பெரியார் அண்ணாவை சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்பதை மீண்டும் கூறியுள்ளார். சில சமயங்களில் நானே ஒரு கம்யூனிஸ்ட்தான் என்றும் கூறியுள்ளார். 

சென்னையில் 11.4.1999ஆம் ஆண்டு தோழர் அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- இரு‍நூற்றாண்டு வரலாறு என்ற நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்று கலைஞர் உரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன். திராவிட இயக்கம் என்று ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால், பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால் நான் நல்லகண்ணு பக்கத்திலே, சங்கரய்யா பக்கத்திலே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக உட்கார்ந்திருப்பேன் என்று குறிப்பிட்டார். ஆனால் ஒரு சில தினங்களிலேயே பாஜக தலைமையிலான கூட்டணி அரசை ஆதரித்து திமுக வாக்களித்தது.  

திமுகவின் இந்த அந்தர் பல்டி எங்களை மட்டுமல்ல நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது.  அருணன் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறபோதே பாஜகவிற்கு திமுகவின் ஆதரவைப் பெற திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக பின்னாளில் தெரியவந்தது. அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து  போட்டியிடவும் திமுக தயங்கவில்லை. பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்கும் இந்தக் கூட்டணி நாட்டுக்கு நல்லதாக அமையும். சிறுபான்மை மக்களை பாதுகாக்க இத்தகைய கூட்டணி உதவும் என்று கருணாநிதி கூறினார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 26.4.1999) 

மதவெறி பாஜகவை ஆதரிப்பதிலும், அதன் மூலம் பதவி பெறுவதையும் ஒரு கம்யூனிஸ்ட் கனவிலும் நினைத்துப்பார்க்க மாட்டான் அல்லவா? பாஜகவுடன் திமுக கூட்டணி அமைந்ததால் நாட்டுக்கு நடந்த நல்லது என்ன?. சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட்டார்களா? என்பதை கலைஞர்தான் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். குஜராத், ஒரிசா, கர்நாடகம் என பல மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் தாக்கப்பட்டபோது அதைத் தடுக்க திமுகவால் முடிந்ததா? குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உண்ணாவிரதத்தை அதிமுக தலைமை ஆதரித்ததை மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்தது. ஆனால் பாஜக தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்த காலத்தில்தான் 2003ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.அது குறித்து கேட்டபோது அது வேறு மாநில பிரச்சனை என்று பதிலளித்து திமுக ஒதுங்கிக் கொண்டதே? இதுதான் கம்யூனிஸ்ட் கொள்கையா? 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டு மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. தேர்தலுக்குப்பின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. சமச்சீர்கல்வி, விவசாயத் தொழிலாளர் நல வாரியம் கலைப்பு போன்ற பிரச்சனைகளில் அதிமுகவின் நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது. குறிப்பாக பரமக்குடியில் தலித் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்சிச்சூட்டை வன்மையாகக் கண்டித்தது. அதே நேரத்தில் திமுக ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் நடந்த படுகொலையையும் மறந்துவிட முடியாது. 

திமுக – காங்கிரஸ் கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்று சிபிஐ(எம்) மேற்கொண்ட கொள்கை உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் சில நலத் திட்டங்கள் அமலாக்கப்பட்டதை சிபிஐ(எம்) மறுக்கவில்லை. ஆனால் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் யாரும் மறைக்க முடியாது. கடந்த ஜனவரி 24-25, 2011 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நிறைவேற்றிய தீர்மானம் திமுக ஆட்சியைப் பற்றி கீழ்க்கண்டவாறு தெளிவாக கூறுகிறது. 

"கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மணற் கொள்ளை, நில மோசடிகள், நில ஆக்கிரமிப்புகள் அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. அனைத்து துறைகளிலும் லஞ்ச லாவண்யம், ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. அமைச்சர்கள் ஆளும் கட்சி பிரமுகர்கள் அளவற்ற சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். மொத்தத்தில் எல்லா துறைகளிலும் திமுக அரசு தோல்வியை கண்டுள்ளது. அரசியல், ஊடகம், திரைத்துறை என முதல்வரின் குடும்ப ஆதிக்கம் ஆக்டோபாஸ் போன்று மாநிலத்தில் எல்லா துறைகளிலும் வளர்ந்து தமிழகத்தையே கபளீகரம் செய்து வருகிறது." 

தமிழக அரசியலில் திமுக தலைவர் குடும்பத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று தினகரன் நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பையொட்டி மதுரையில் இந்நாளேட்டின் அலுவலகத்தை மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கி தீயிட்ட போது அங்கு பணியாற்றிய மூன்று ஊழியர்கள் தீயில் கருகி இறந்தனர். இத்தகைய தாக்குதல் நடைபெறுகிற போது திமுக அரசின் காவல்துறையினர் கை கட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது. திமுக அரசின் இந்த கொள்கைக்கு என்ன பொருள்? திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கை திமுக கையாண்டமுறை எந்த கொள்கையின் அடிப்படையில் வருகிறது. நாடு‍ சுதந்திரம் பெற்ற பிறகு‍ 63 ஆண்டு கால தமிழகத்தில் என்றைக்கும் காணாத அளவிற்கு ஆளுங்கட்சிக்காரர்கள் (திமுகவினர்) நிலமோசடி செய்துள்ளார்களே? இது எந்த கொள்கையில் வருகிறது? 

மத்தியில் வரலாறு காணாத 2ஜி அலைக்கற்றை ஊழலில் திமுக தலைவர்கள் சிக்கியிருப்பதை நாடறியும். ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் பன்னாட்டு கம்பெனிகளில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்கு அனுமதி மறுத்து தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தபோது திமுக அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமையேற்ற தொழிற்சங்கத் தலைவர் அ. சவுந்தரராசனை கை விலங்கிட்டு கைது செய்தது  என்ன கொள்கை? 

2006ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையை திமுகவினர் அரங்கேற்றி தேர்தலில் தில்லுமுல்லு செய்து இதையொட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்திட உத்தரவிட்டது. 2006 சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் அரங்கேற்றிய வன்முறை என்ன கொள்கை? திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி ராமகிருஷ்ணன் என்ன கூறிய போதிலும் கட்சியில் உள்ள மற்றத் தோழர்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்று தாம் உறுதியாக இருப்பதாக கலைஞர் கூறுகிறார். முன்னொருச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நான் வளராமல் பார்த்துக் கொண்டேன் என்று கூறிய கலைஞரை மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தனி நபர் விருப்பு-வெறுப்பு அல்லது குடும்ப நலன் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. கொள்கையாக இருந்தாலும் சரி, நடைமுறையாக இருந்தாலும் சரி முழுமையாக விவாதிக்கப்பட்டு ஜனநாயக அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது. எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அளவில் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக விளங்குகிறது. இந்த நிலையில் ராமகிருஷ்ணன் கருத்தை அந்தக் கட்சித் தோழர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கலைஞர் கூறுவதை கட்சியிலுள்ள எந்தத் தோழரும் ஏற்கமாட்டார்கள். ஏனெனில், தேர்தலில் பெறுகிற வெற்றி தோல்வியை விட, அமைச்சர் பதவிகளை விட, நாட்டு நலனை, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது மார்க்சிஸ்ட் கட்சி ஆகும்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply