திமுக தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி விளக்கம்!

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையொட்டி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கிற போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கமாக இருந்து மக்களை பாதிக்கக் கூடிய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கியதோடு வரலாறு காணாத ஊழலிலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட திமுகவுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்பாடு வைத்துக் கொள்ளாது என்று விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பாஜக-வும் மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கிய காங்கிரசும் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட அகில இந்திய அளவிலான ஒரு மாற்றை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வரக்கூடிய அஇஅதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இத்தகைய கட்சிகளோடு உடன்பாடு வைத்துக் கொள்வோம் என்பதைத்தான் திமுக தலைவர் விமர்சிக்கிறார்.

இத்தகைய தேர்தல் உடன்பாடு கொள்கிற கட்சிகள் அனைத்து அம்சங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு 100 சதவிகிதம் ஒத்துப்போக வேண்டும் என்கிற அவசியமில்லை. பல பிரச்சனைகளில் மாறுபட்ட நிலை இருந்தாலும் தொகுதி உடன்பாடு ஏற்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் பல முறை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திய போதும், சாதாரண வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் முறையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதித்த போதும், வங்கிகளை தனியாருக்கும் அந்நியருக்கும் தாரைவார்க்கும் சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்த போதும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள மோசமான சரத்துக்களை நீக்க மறுத்தபோதும், காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடி, ஆதரவளித்து அவற்றை நிறைவேற்ற ஒத்துழைத்த காரியத்தை திமுக செய்து கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சனையை காரணமாக்கி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறிவிட்ட பிறகும் இந்த விசுவாசம் தொடர்ந்தது. மாநிலங்களவைத் தேர்தலில் திமுக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது காங்கிரஸ் எவ்வித தயக்கமும் இன்றி ஆதரவளித்தது. எனவே, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்திருப்பது இறுதியான முடிவாகக் கருத முடியாது.

பாரதிய ஜனதா கட்சி குறித்து “ஒரு கட்சிக்கு என்ன பெயர் என்பதைப் பற்றி அல்ல கவலை, அந்த கட்சிக்கு தலைமையேற்றிருப்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? நம்மிடத்திலே எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கக் கூடியவர்கள்? நம்மை எப்படி மதிக்கக்கூடியவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கிற காரணத்தினால் தான் நாம் இந்த வித்தியாசங்களை, இந்த முரண்பாடுகளை உங்களிடத்திலே இப்போது எடுத்து விளக்கினேன்” என்று திமுக தலைவர் அதன் பொதுக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், டைம்ஸ் ஆப் இந்தியாவில் திமுக தலைவரின் நேர்காணல் வெளிவந்துள்ளது. பத்திரிக்கை நிரூபரின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் “எனது சொந்த கருத்து மோடி நல்ல மனிதர். அவருடைய மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறப்பான கவனம் எடுத்துக் கொண்டார். நிர்வாகத்தில் அவர் திறமையானவர் என்பதை குஜராத்தில் நிரூபித்திருக்கிறார். மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்”. இது திமுக தலைவர் நேற்று (19.12.2013) சொன்ன கருத்து.

2002 ஆம் ஆண்டு  நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் என ஆயிரக்கணக்கானோரை முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டியும் எரித்தும் கொன்ற போது அது வேறு மாநில பிரச்சனை என்று 2002 இல் திமுக தலைவர் கருத்து சொல்ல மறுத்தார். மோடிக்கு நல்லவர் பட்டம் இப்போது வழங்குவதற்கும் அப்போது கருத்து சொல்ல மறுத்ததற்கும் சம்மந்தமே இல்லை என்று யாரேனும் முடிவுக்கு வர முடியுமா?

இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தாலே திமுக வின் நிலைபாடு என்னவென்று புரிந்துவிடும்.

1991 இல் துவங்கி இதுநாள் வரையிலும் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மாறி மாறி அமலாக்கி வந்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. மேலும், பாஜக மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடிய வகுப்புவாதத்தை அணுகுமுறையாகக் கொண்ட கட்சி. எனவேதான், வகுப்புவாத பாஜக அல்லாத நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை கொண்ட காங்கிரஸ் அல்லாத ஒரு மூன்றாவது மாற்றே இன்றைய தேவையாக உள்ளது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக முன்வைக்கிறது.

 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply