தியாகி அஞ்சலை அம்மாளுக்கு நினைவகம் அமைத்திட கே. பாலகிருஷ்ணன் சட்டப்பேரவையில் வலியுறுத்தல்

14.9.2015 அன்று சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் அவர்கள் “தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் நினைவகம் கட்ட வேண்டுமெனவும், தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை சரிபாதி வெட்டப்பட்டுள்ளது குறித்தும்” பேசிய பேச்சுக்குறிப்பு.


கடலூரில் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு நினைவகம் அமைத்திடுக!

முதியோர் உதவித் தொகை சரிபாதியாக வெட்டபட்டுள்ளது!!

சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சட்டப் பேரவையில் வலியுறுத்தல்

மாண்புமிகு. வருவாய்த்துறை அமைச்சர் அவர்களிடத்திலே ஒரு விளக்கம் கேட்பதற்கு முன்னால், கடலூரிலே விடுதலைப் போராட்டத்திலே கலந்து கொண்டு ஏழரை ஆண்டு காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து, பெண்கள் அரசியலுக்கு வருவதற்கே தயங்குகிற காலத்தில் விடுதலைப் போராட்டத்திலே கலந்து கொண்டு, கர்ப்பிணியாக சிறைக்குச் சென்று, சிறையிலேயே குழந்தையை ஈன்றெடுத்து, அந்தக் குழந்தைக்கு ‘ஜெயில்மணி’ என்று பெயர் வைத்து, தமிழக சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதே சட்டமன்றத்தில் இடம் பெற்ற மரியாதைக்குரிய அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் ஒரு நினைவகம் கட்டுவதற்கு மாண்புமிகு. அமைச்சர் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, முதியோர் ஓய்வூதியம் சம்பந்தமாக நிறைய விளக்கங்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக 36.58 இலட்சம் பேருக்கு ஒதுக்கீடு தொகை வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு 4,158 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனை விளக்கப் பட்டியலைப் பார்க்கின்ற போது அதற்கு சற்று மாறுபட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஓய்வூதியர்கள் 2011-12ல் 4,88,266; 2012-13ல் 7,92,605 என இருந்தது 2014-15ல் 3,35,251 என்று குறைந்திருக்கிறது. இந்த ஆண்டும் அதுபோன்று குறைந்திருக்கிறது. உண்மையில் தகுதியற்றவர்களை நீக்கியிருப்பது என்பது சரியான நடவடிக்கை என்று சொன்னாலும் கூட 7,92,605லிருந்து 3,35,251 ஆகக் குறைந்திருக்கிறபோது, சரிபாதியாகக் குறைந்திருக்கிறதென்று சொன்னால், அந்த அளவுக்கு தகுதியற்றவர்கள் அப்போது உதவித் தொகை பெற்றார்களா என்பதற்கும், அப்படி தகுதியற்றவர்கள் உதவித் தொகை பெறுவதற்கு சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதற்கும் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

(கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,)

சிதம்பரம் தொகுதி

Check Also

அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ...