திராவிட கழகத்தினர் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல்: சிபிஐ(எம்) கண்டனம்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை விதித்திருந்த தடையை ரத்து செய்தும், நிகழ்ச்சிக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கேற்ப ஏப்ரல் 14 அன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. ஆனால் அன்று மாலையில் இந்துத்துவ சிவசேனா அமைப்பைச் சார்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த திராவிடர் கழகத்தினரின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த வன்முறைத் தாக்குதல் சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அலுவலகத்திற்கு முன்பே நடந்துள்ளது. இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘தாலி’ குறித்த விவாதத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளேயே இந்துத்துவ மதவெறி சக்திகள் அத்துமீறி புகுந்து வன்முறைத் தாக்குதலை நிகழ்த்தி நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் தடுத்தது. இதனைத் தொடர்ந்து இப்போது டாக்டர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தன்று சாதி பாகுபாடு, பாலின ஒடுக்குமுறை, மூடநம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பும் வகையில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் மீதும் மதவெறி சக்திகள் வன்முறையை நிகழ்த்தியுள்ளது.

தாலி அணிவதும் – அகற்றுவதும், தாலி அணியாமல் இருப்பதும் தனிநபர் விருப்பம் சார்ந்ததாகும். அதுபோல் கருத்துக்களை வெளிப்படுத்தும், பரப்பும் சுதந்திரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக காவல்துறை இந்நிகழ்வுக்கு தடை விதித்தது தனிநபர் உரிமைக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும்.

எனவே கருத்துரிமை – மாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் செயல்களுக்கு துணைபோகாமல் மதவெறி சக்திகளின் வன்முறைச் செயல்களை தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும்; அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் உரிமை, கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை தமிழகத்தில் நிலைநிறுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

திராவிடர் கழகத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...