திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை

அன்பிற்குரிய திரிபுரா மக்களே,

இந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன்.

சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம்.

இந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக நினைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியப் பாரம்பரியம். சமத்துவம்தான் இந்தியாவை ஒரு நாடாக இணைத்து வைத்திருக்கும் கூறு. சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கவும், தேவையற்ற பல்வேறு குழப்பங்களை உருவாக்குவதற்கும் பல முயற்சிகள் நடந்து வருகின்றன.

பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், நாட்டை ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றும் பொருட்டு, மதத்தின் பெயராலும், சாதிகள், இனங்களின் மூலம் பிரிவினையேற்படுத்தி மக்களை மாற்றும் முயற்சி நடத்தப்பட்டு வருகிறது. இத்தகையவற்றால், தலித்துகளும், சிறுபான்மையினர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வாழ்க்கை என்னும் நிலை அடித்து நொறுக்கப்படுகிறது. இவை சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வுகளாகும். சுதந்திர நாட்டின் கனவுகளையும், குறிக்கோள்களையும் அழிக்கும் முயற்சிகள் இவை. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்களின் ஆதரவாளர்கள் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டின் ஒருமைப்பாட்டை அசைத்து வருகிறார்கள். தேசபக்தி கொண்ட ஒவ்வொரு குடிமகனும், இத்தகைய தாக்குதல்களையும், ஒருமைப்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்க வேண்டும். தலித்துகளுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் அரணாக நின்று, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காக்க வேண்டும்.

வசதி படைத்தவர்கள், ஏதுமற்றவர்கள் என இந்த இருபிரிவுக்கும் இடையிலுள்ள வெளி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நாட்டின் வளங்களும், இருப்பும் சிலரது கைகளில் மட்டுமே தங்கியிருக்கிறது. வறுமையில் பெரும்பாலான மக்கள் உழல்கிறார்கள். மனிதத் தன்மையற்ற சுரண்டலால் பாதிக்கப்படும் மனிதர்கள் இவர்கள். நாட்டின் கொள்கைகள், இத்தகைய சுரண்டலுக்கு காரணமாக இருக்கிறது. மக்களுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். வெற்று வார்த்தைகள் மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது. சோர்வேதும் இல்லாமல், பயமற்ற குரலில் போர்க்குரல்கள் ஒலிக்கும்பொழுது பாதிக்கப்படும் மக்களைக் காக்க முடியும். அனைத்து மக்களுக்கான நலனையும் கருத்தில் கொண்டு மாற்றுக் கொள்கைகளை வகுக்கும் அரசியல் மிக அவசியத் தேவையாய் உள்ளது. இந்த மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, மாபெரும் பொருளாதார, அரசியல், சமூக இயக்கத்தை இணைந்து முன்னெடுக்க இந்தியர்கள் உறுதியெடுக்க வேண்டும்.

நாட்டின் வேலையில்லா நிலை மக்களிடம் நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்து வருகிறார்கள், மறுபுறம் படித்த, வேலையில்லா இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கிடக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தாமல், இந்த பூதாகரமான பிரச்சனை தீர்வதற்கு வழியில்லை. அழிவுப் பாதை கொள்கைகளை மாற்றியமைத்து செயல்படுவதற்கு இளைஞர்களும், உழைக்கும் மக்களும், மாணவர்களும் தொடர்ச்சியாக போராடும் சபதத்தை இந்நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறாக, திரிபுரா மாநில அரசு, அடித்தட்டு மக்களின் நலனை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி, அனைத்து மக்களின் நலனையும், அவர்களது ஒத்துழைப்புடன் வெல்லும் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய கொள்கைகள் திரிபுரா மக்களை கவர்வதற்கானது அல்ல. இதை சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. மாநிலத்தின் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் கெடுப்பதற்கு கட்டுக் கதைகளைக் கட்டி வருகிறார்கள் சிலர். அமைதியை உருக்குலைக்கும் இத்தகைய சக்திகள் தனித்துவிடப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டும். இந்த சுதந்திர நாளில், சரியான சிந்தனை கொண்ட, அமைதியை விரும்பும், வளர்ச்சியை விரும்பும் திரிபுரா மக்கள், இத்தகைய நாசவேலையைச் செய்யும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து களமாடும் உறுதியை மேற்கொள்ள வேண்டும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...