திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து சிபிஐ(எம்) கண்டனம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.

இந்த தொழிற்சாலை நீண்டகாலமாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுப்பட்டு அருகிலுள்ள பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  எனவே இத்தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.  காவல்துறையும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இதனை அலட்சியமாகவே பார்த்துள்ளனர்.

சமீப காலமாக பட்டாசு தொழிற்சாலை மற்றும் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு அப்பாவி தொழிலாளர்கள் பலியாவது தமிழகத்தில் தொடர் கதையாக நீடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

போதுமான கட்டுமான வசதி, உரிமம், பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை தனியார் பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ளனவா என தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்காணிக்கத் தவறுவதே இதுபோன்ற வெடிவிபத்துகளுக்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே இந்த வெடிவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்திட வேண்டுமெனவும்; உயிரிழந்த குடும்பங்கள் அனைவருக்கும் உரிய நட்ட ஈடும் அவர்தம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும்; படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டுமெனவும், இதுபோன்ற வெடிவிபத்துகள் இனியும் நடக்கா வண்ணம் கண்காணிப்பு ஏற்பாடுகளை கறாராக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...