திருப்பூரில் சங் பரிவார் அராஜகம் சிபிஐ(எம்) கண்டனம்

திருப்பூரில் 27.01.17 அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் திரு. முத்து என்கிற மாரிமுத்து என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார். உடனடியாக பாரதிய ஜனதா கட்சி தலைமை இது கொலை என அறிவித்தது. தூக்கில் தொங்கிய இடத்திற்கு அருகிலேயே தேசியக் கொடி தலைகீழாகப் பறக்க விடப்பட்டிருந்தது, பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட அம்சங்கள், கொலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முனைந்ததை காட்டுகிறது.  உடனடியாக திருப்பூர் நகரத்தில் பதட்டம் தூண்டி விடப்பட்டு,  கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் தற்போது அது தற்கொலை என்றும், கொடுக்கல் – வாங்கல் மற்றும் முறைகேடான பெண் தொடர்பு காரணங்களாக இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுதாக விகடன்.காம் உள்ளிட்ட ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கடந்த ஆண்டு செப்டம்பரில்  கோயம்புத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். உடனே கொலையாளிகள் முஸ்லீம் மதத்தினர் என்று வெறியூட்டப்பட்டு,  கோவையிலிருந்த சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்களும் – வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன, பல வீடுகள் தாக்கப்பட்டன. இசுலாமிய குடும்பங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டன.  இன்று வரை கொலையாளிகள் யாரென தெரியவில்லை, யாரும் கைது செய்யப் படவும் இல்லை. இதைப் போல ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத் பிரமுகர் கொலையிலும் பிற மதத்தினர் மீது சந்தேகப்படும்படியான அறிக்கைகள் அவர்கள் தரப்பில் இருந்து வந்து பின்னர் தொழில் கூட்டாளிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகக் கொல்லப்பட்டார் என்பது வெளி வந்தது.

இதுபோன்று தனிநபர் விரோதங்களால், தொழில்போட்டியால் அல்லது தவறான தொடர்புகளால் நடக்கும் கொலைகளுக்கு சங்பரிவார் அமைப்புகள் மத மற்றும் அரசியல் சாயம் பூசி தாக்குதல் தொடுப்பதும், சொத்து சூறையாடலில், வாழ்வாதார தாக்குதலில் ஈடுபடுவதும் வழக்கமாகியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு  தென்காசியில் இவர்களின் அலுவலகங்கள் முன்பு குண்டு வெடித்ததும், அந்த இடத்தில் முஸ்லீம்கள் அணியும் தொப்பி ஒன்று கண்டெடுக்கப்பட்டதும் முஸ்லீம்கள் சில பேர் கைது செய்யப்பட்டதும் நடைபெற்றது. ஆனால், பின்னர் விசாரணையில் அந்த அமைப்பினரே தங்கள் அலுவலகத்திற்கு குண்டு வைத்து விட்டு முஸ்லீம்கள் மீது பழிபோட வேண்டுமென்பதற்காக தொப்பியைப் போட்டு வைத்தனர் என்கிற உண்மையும் வெளிப்பட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது எந்தவொரு வாய்ப்பையும் மத மற்றும் அரசியல் மோதலுக்காக பயன்படுத்தும் இயல்பில் சங்பரிவார் அமைப்புகள் இருப்பது தெரிகிறது. கலவரங்களைத் தூண்டுவதன் மூலமாக அரசியல் வளர்ச்சி பெறுவது என்ற இவர்களின் நாடு தழுவிய உத்தியைப் பயன்படுத்த தமிழகத்தையும் களமாக்குகிறார்கள் என்பது கவலைக்குரியது.

எனவே காவல்துறை திருப்பூரில் மரணமடைந்த முத்து (எ) மாரிமுத்துவின் பிணத்தின் அருகே தேசியக் கொடி, செருப்பு மாலை, டி.பி.ஆர். 1,2,3,4,5 என்கிற வாசகம் அடங்கிய அட்டை ஆகியவற்றை வைத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டுமெனவும், தேங்கியுள்ள இது போன்ற இதர வழக்குகளில் கொலையாளிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அரசியல், மதவெறி கொலைகள் கண்டனத்துக்குரியவை. யார் செய்திருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை. ஆனால், சொந்த பிரச்னைகளில் நடக்கும் கொலைகள் எல்லாவற்றுக்கும் அரசியல், மத சாயம் பூசி, வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டுவது, அதில் குறுகிய அரசியல் ஆதாயம் தேடுவது என்ற சங்பரிவார் அமைப்புகளின் சூழ்ச்சியினை  நிராகரித்து, நல்லிணக்கம் காக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக  மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...