திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் சிபிஐ(எம்) கண்டனம்

திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, சக்தி தியேட்டர் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கடந்த வியாழனன்று (5.9.2019) ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணி அமைப்பினர், அங்கு அருகிலிருந்த தனியார் பின்னலாடை நிறுவனம் நன்கொடை தரவில்லை என்று கூறி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களையெல்லாம் அடித்து, உடைத்து, நாசமாக்கி, தடுக்க வந்த தொழிலாளர்களையும், பெண்களையும் ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பின் இந்த தீவிரவாத வன்முறை நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்து முன்னணி அமைப்பினர் சட்டத்திற்கு புறம்பாக இப்படிப்பட்ட வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது காவல்துறை ஒரு சிலரை கைது செய்துள்ளது என்றாலும், இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் மத நம்பிக்கையுடையோர், கடவுள் வழிபாட்டு நடவடிக்கைகளில் அமைதியுடன், மதநல்லிணக்க உணர்வுகளுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது நமது தமிழக பாரம்பரியம். ஆனால் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக செல்கிறோம் என்று வேண்டுமென்று திட்டமிட்டு, மதக் கலவரத்தையும், பொதுமக்கள் சொத்தையும் சூறையாடுகிற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும் எந்த அசம்பாவித நடவடிக்கையும் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...