திருப்பூர் டாக்டர் தில்லியில் மர்ம மரணம்: உண்மையைக் கண்டறிய சிபிஐ(எம்) கோரிக்கை

திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கணேசன் என்பவரது மகன் டாக்டர் சரவணன், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. (பொது மருந்தியல்) மேற்படிப்புக்காக சேர்ந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அங்கு இவர் தங்கியிருந்த அறையில், வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டாக்டர் சரவணனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு சென்று சடலத்தைப் பெற்று வந்துள்ளனர். அவர் எந்த வகையிலும் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பில்லை என்று குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் உயர்ந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் கடுமையான போட்டி நிலவக்கூடிய பிரிவில், முழுக்க முழுக்க தனது கல்வித் தகுதியின் அடிப்படையில் டாக்டர் சரவணன் இடம் பிடித்திருக்கிறார். அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவரது மர்ம மரணம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அத்துடன் அவரது முகத்தில் இருக்கும் காயங்கள் உட்பட இந்த விசயத்தில் மேலும் பல சந்தேகங்கள் உள்ளன.

எனவே டாக்டர் சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளதால் இந்த விசயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் எய்ம்ஸ் நிறுவனம் உள்ளதால், இவ்விசயத்தில் மத்திய அரசு நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் தமிழக அரசு இந்த விசயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி டாக்டர் சரவணன் மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவர முயற்சி செய்வதுடன், அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்து சட்டப்படி கடுமையாகத் தண்டனை பெற்றுத் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...