திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரியவகை காட்டுமரங்களை வெட்டுவதா? சிபிஐ(எம்) கண்டனம்

திருவண்ணாமலையின் பிரசித்தி பெற்ற மலை சுற்றுப்பாதையை ஒட்டிய பகுதி மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரங்களால் ஆனது. குறிப்பாக இங்குள்ள சோனா நதி காட்டுப்பகுதியில் துரிஞ்சி, கருங்காலி, அத்தி, கடப்பை, வக்கரி, காட்டுவா, வெலுங்கு, அவஞ்சி, நிலவேல், கருங்கொன்னை போன்ற அபூர்வ வகை மரங்கள் நிறைந்துள்ளன.

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலும், அதன் கிரிவலப்பாதையை ஒட்டிய இக்காட்டு மரங்களும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கிறது. இயல்பிலேயே அக்னி நகரமான திருவண்ணாலை நகருக்கு ஒரே இயற்கை பாதுகாவலன் இம்மலையும் அதன் வனப்பான காட்டுமரங்களுமே.

இந்நிலையில் மலை சுற்றுப்பாதையில் வளர்ச்சி பணிகள் மற்றும் பக்தர்களுக்கு யாத்ரி நிவாஸ் கட்டுகிறோம் என்ற பெயரில் சோனா நதி காட்டுப்பகுதியில் 545 அடர்மரங்களை வெட்டியெறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 27-2-2017 அன்று உத்தரவிட்டுள்ளார்.

சோனா நதிப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதனை மீறி இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது மட்டுமல்ல, இயற்கைக்கும் விரோதமானது.

வளர்ச்சி பணிகளோ, யாத்ரி நிவாஸ் கட்டுமானங்களோ அவசியமானது என கோவில் நிர்வாகம் கருதினால், இதே நகரத்தில் கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

மரங்களை வெட்டக்கூடாது என மலை சுற்றுப்பாதை சூழல் பாதுகாப்புக்குழுவின் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கும், 10-3-2017 அன்று நடைபெறவுள்ள கோரிக்கை முழக்க இயக்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

எனவே,   மரங்களை வெட்டி அழிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை திரும்பப் பெற உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...