திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த ஒரு சட்ட விரோத கருக்கலைப்பு மையம் கண்டறியப்பட்டு அங்கு செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையொட்டி, கடந்த 10 ஆண்டுகளில் 19000 கரு கலைப்பு நடந்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அளித்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கை இயல்பான கரு கலைப்பாக இருக்க முடியாது. பெண் கரு என்று தெரிந்து பாலின தேர்வின் அடிப்படையில் அழித்ததாகவே இருக்க முடியும். மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மையங்களின் ஒத்துழைப்பு இல்லாமலும் இதை செய்ய முடியாது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சட்டவிரோத கருக்கலைபபு மையத்தின் மீது எடுத்த இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

பெண் கரு அழிப்பை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றுவதைத் தடுக்கவும், மருத்துவர்கள், ஸ்கேன் மையங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் PC PNDT சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட மாநில/மாவட்ட ஆலோசனை குழுக்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. 2016 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி, தமிழகத்தில் 91 வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அதில்  18 பேர் மட்டுமே தண்டனை பெற்றிருப்பதாகவும், ஒரு மருத்துவரின் உரிமம் கூட ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 2014 முதல் தமிழகத்தில் பிடிபட்ட 1472 சட்ட விரோத கரு கலைப்பு குற்றவாளிகளில்  அதிகமானவர்கள் திருவண்ணாமலை, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. எவ்வித பாதுகாப்பும் இன்றி மொட்டை மாடியில் திறந்த வெளியில் நடக்கும் கரு கலைப்பு உள்ளிட்ட  பல கொடுமைகள் நடக்கின்றன. தாயின் உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

தனிப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது ஒரு புறம் இருந்தாலும், பெண் கரு வேண்டாம் என்ற மனநிலைக்கானக் காரணத்தை ஆய்ந்து அதை சீர்செய்வதற்கான முயற்சிகளில் தொலை நோக்குப் பார்வையுடன் தமிழக அரசு இறங்குவதில்லை. மகனுக்கு முன்னுரிமை தரும் கருத்தியல், சாதி/மத சடங்குகள், புத்திர யாகம் போன்றவற்றை எதிர்த்த பிரச்சாரம் தேவை. அதிகரித்து வரும் பெண்கள்/ குழந்தைகள் மீதான வன்முறையுடனும் இது தொடர்புடையது.

ஆணாதிக்க, சாதிய கோட்பாடுகளைப் புனிதமாகக் கருதும் இந்துத்வ கருத்தியலைப் பின்பற்றும் மத்திய பாஜக அரசு, அதன் பினாமியாக செயல்படும் தமிழக அரசு ஆகியவற்றின் ஆட்சியில் ஒரு பிற்போக்கு கருத்தியல், மனநிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அண்மையில் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஆயுர்வேதத்தின் மூலம், விரும்புகிற பாலினத்தைக் கருவாக்க முடியும் என்பது போன்ற சட்டத்தற்கு விரோதமான பேச்சுக்களை, சட்டப்படி  ஒரு குற்றமாக இணைக்க வேண்டும் என்ற பெண்கள் அமைப்புகளின் கோரிக்கை நியாயமானதே.

தமிழகம் முழுவதும் இச்சட்டத்தை அமல்படுத்த முறையான ஏற்பாடுகளை செய்வது, 0-6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை வட்ட வாரியான/ஆரம்ப சுகாதார நிலைய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தலையீடு செய்வது, பெண் சமத்துவ கருத்துக்களைப் பாடநூல்கள் உட்பட  பரவலாக்குவது, வரதட்சணை மற்றும் வன்முறை தடுப்பு சட்டங்களைக் கறாராக அமலாக்குவது, குறிப்பிட்ட வழக்குகளில் ஸ்கேன் மைய பொறுப்பாளர்கள், மருத்துவர், இடைத்தரகர் உட்பட அனைவருக்கும் தண்டனை கிடைக்க செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பெண் குழந்தையே வேண்டாம் என்ற கருத்தியல் பாலின சமத்துவமின்மையின் உச்சகட்ட வெளிப்பாடு. மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இது குறித்து கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.

சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்தவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உடனடியாக உரிய தண்டனை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...