திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் பெரும்பாலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் வட்டம், சோமதேவன்பட்டு கிராமத்தை சார்ந்த விவசாயி திரு. எத்திராஜ் (62) என்பவரின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கண்டு மனமுடைந்த எத்திராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த 26.11.2016ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார். அக்கிராமம் உள்ளிட்டு, சுற்று வட்டார கிராமங்களான மெய்யூர், ராஜபாளையம், வேம்பட்டு, கரக்கம்பாக்கம், தேவந்தவாக்கம் மற்றும் மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் மழையின்றி விவசாயம் முழுமையாக பாதிப்படைந்து நட்டபயிர்கள் கூட ஆடு மாடுகள் மேய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் இணைந்து, மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரியும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 2.12.2016ல் மறியல் நடத்திட முறையாக அறிவிப்பு செய்திருந்தனர்.

விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு மாறாக, ஊத்துக்கோட்டை சரக டி.எஸ்.பி. அவர்கள், சங்கத்தின் நிர்வாகிகளான தோழர்கள் சம்பத், ரவி, ஆறுமுகம், முருகன், டில்லி உள்ளிட்ட 30 தோழர்களையும், குறிப்பாக மரணமடைந்த விவசாயின் மகன் குருமூர்த்தி ஆகியோரையும் இரவோடு இரவாக கைது செய்துள்ளார். மாவட்ட காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திடவும், உயிரிழந்துள்ள விவசாயி எத்திராஜ் குடும்பத்தினருக்கும், நஷ்டத்திற்குள்ளான விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...