துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பதவி நீக்கம் செய்திடுக…!

7-4-2017

கூட்டாட்சி கோட்பாட்டை சிதைத்திடும் வகையில் செயல்படும்

துணைநிலை ஆளுநரை பதவி நீக்கம் செய்திடுக…!

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்றது முதல் அதிகார அத்துமீறல்கள் செய்து  வருகிறார். தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக பொதுவெளியில் பேசுவதும், அரசின் அன்றாட  நடவடிக்கைகளை முடக்குவதும் தொடர்கிறது. துணை நிலை ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும். புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை ரீதியாகவும், நடைமுறை பிரச்சனைகளிலும் முரண்பட்டு உள்ளது. அரசின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது. ஆனால், அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் செயல்பாடு முடக்கப்படுவதையும், ஆளுநரால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அமைச்சரவைக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மாறுபாடு உள்ள விஷயத்தில் ஜனாதிபதியின் வழிகாட்டுதல் பெற்று செயல்படுத்த யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் குறிப்பிடுகிறது. பொதுவாக அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பது,என்பது தான் துணை நிலை ஆளுநரின் அணுகுமுறை என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஆனால் எதையும் மதிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது ஏற்புடையதல்ல.

மத்திய பா.ஜ.க. அரசு தன அரசியலுக்கு சாதகமான கருவியாக ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. ஆளுநர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைகளை அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கலைத்ததையும் உச்சநீதிமன்றம் அதனை கண்டித்ததையும் நாடறியும். தற்போது புதுச்சேரி மற்றும் டெல்லியிலும் ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போடுவது தொடர்கிறது.

தற்போது துணை நிலை ஆளுநரின் நேரடி உத்தரவை தொடர்ந்து நகராட்சி ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடு, ஆணையர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் வழிகாட்டுதல் பெறாமல் ஆணையர் காவல்துறையில் புகார் அளித்ததும், சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்ததும் நடந்துள்ளது. உரிமை மீறல் புகார் தகுதியுடையதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றாலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்சனை வலுவாக எழுந்ததால் சபாநாயகர் நகராட்சி ஆணையரை காத்திருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் துணை நிலை ஆளுநர் சட்டமன்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து ஆணையர் சந்திரசேகரனை பதவியில் அமர்த்தியதோடு நீதான் கதாநாயகன் என்று சொல்லி ஆணையரை தட்டிக்கொடுத்துள்ளார். இந்தச் செயல் அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்துகிற, சட்டமன்ற சபாநாயகரின் உரிமையை பறிக்கிற அணுகுமுறையாகும்.  மேலும், துணை நிலை ஆளுநர்  அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயநல பேர்வழிகள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். துணை நிலை ஆளுநர் தன்னுடைய வார்த்தையினை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் பின்னணி, அரசியல் பிரவேசம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். மக்களுக்கு எதிரான மோடியின் திட்டத்தை செயல்படுத்தி மேலும் மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு செல்ல துடிக்கிற தங்களின் உள்மன விருப்பத்தை ஈடேற்ற மக்கள் ஆட்சியை முடக்குவதையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதையோ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆகவே  மாநில வளர்ச்சி, மக்கள் நலனை கவனத்தில் கொண்டு புதுச்சேரிக்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் நிதி உதவி வழங்கவும், துணை நிலை ஆளுநரை திரும்ப அழைக்குமாறும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...