தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிடுக

24.9.2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 2

தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிடுக

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் அர்ஜூனன் 29.05.2018 அன்றே உள்துறை செயலாளருக்கும் சிபிஐ இணை இயக்குநருக்கும் புகார் அளித்திருந்தார். அது நடக்காத பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வேறு சிலரும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வழக்கு போட்டிருந்தனர்.

சிப்காட் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அத்தனை வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு மற்றும் இதர விஷயங்கள் குறித்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான புகார்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் 14.08.2018 அன்று நீதிபதிகள் பஷீர் அகமது, சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பு கிடைத்த தேதியிலிருந்து 4 மாத காலத்துக்குள் இவை செய்யப்பட வேண்டும், சிபிஐ இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்பதும் தீர்ப்பின் அம்சம். காவல்துறை நிலையாணை 703ஐ மாற்றி அமைக்க டிஜிபி ஒரு குழு போட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொலை தொடர்புகளைத் தற்காலிகமாக அரசு துண்டித்ததைப் பொறுத்த வரையில், ஐநா சபையின் கருத்து சுதந்திரம் குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பரிசீலித்துப் பாதுகாக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி.

தவறிழைத்த காவல்துறை மற்றும் நிர்வாகத்தினர் மீது புகார் பதிவு செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். இப்புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணையை சிபிஐ உடனடியாக துவங்க வேண்டுமெனவும், தமிழக அரசு, அனைத்து கோப்புகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...