தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


அனுப்புநர்:

நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020)

த/பெ. ஆதிமூலம்

5, ஹைஸ்கூல் தெருவீரகேரளம்புதூர்

தென்காசி மாவட்டம்

அலைபேசி எண்: 9677590708


தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25/2020) காவல் துறையினரின் தாக்குதலால் உள்ளுருப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளார்.


அவரது இறப்பு முழுக்க முழுக்க வீகேபுரம் காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவால் நடந்ததுள்ளது. 
கடந்த 10.6.2020 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் இரத்த வாந்தியும் எடுத்துள்ளார். சுரண்டை ஜெயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, இரண்டு தினங்களுக்கு பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் உள்ளுறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லி எதனால் இப்படி நடந்தது என கேட்டார். டாக்டரிடம் வீரகேரளம்புதூர் காவல்துறை தாக்கியதில்தான் இப்படி ஆனது என்பதை விளக்கமாக குமரேசன் தெரிவித்துள்ளார். 

கடந்த 8.5.2020 அன்று ஒரு இடப்பிரச்சனை சம்பந்தமாக செந்தில் என்பவர் குமரேசன் மற்றும் அவரது தந்தை மீதும் கொடுத்த புகார் மனுவை விசாரிக்க வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு வரசொன்னதன் பேரில் இருவரும் காவல்நிலையம் சென்றுள்ளனர். விசாரணையின்போது காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குமரேசனை கெட்டவார்த்தைகளில் திட்டி கன்னத்தில் ஓங்கி மாறிமாறி அடித்துள்ளார்.

அதற்கு குமரேசன் நான் எந்த தப்பும் செய்யாதபோது எதற்காக என்னை அடிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்.ஐ சந்திரசேகர் “என்னையே எதிர்த்து பேசுறயால, உன்னை தொலைச்சி கட்டுறேன் பார்” என்று சொல்லி கெட்டவார்த்தையால் திட்டினார். பின்னர் விசாரணை முடிந்து இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 

மறுநாள் 9.5.2020 அன்று மாலை சுமார் 3 மணி அளவில்  குமரேசன் வீரகேரளம்புதூர் பஸ்நிலைய ஆட்டோ ஸ்டேன்டில் நின்றுகொண்டு இருக்கும் போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மீண்டும் உன்னை விசாரிக்க வேண்டும் எனவே 10.5.2020 அன்று காலை 11.00 மணிக்கு காவல்நிலையம் வரவேண்டும் என்று சொல்லி சென்றிருக்கிறார். 

மறுநாள் 10.5.2020 அன்று குமரேசன் தனியாகவே காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரை தனி அறைக்குள் அழைத்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர்  மற்றும் காவலர் குமார் என்பவரும் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். எஸ்.ஐ சந்திரசேகர் லத்தியாலும்; காவலர் குமார் கையாலும் மாறிமாறி அடித்துள்ளனர். சம்மணம் போட்டு உட்கார சொல்லி இரண்டு தொடைகளிலும் இருவரும் ஏறி நின்றுள்ளனர். வலியால் குமரேசன் கதறி அழுதும் விடவில்லை. எஸ்.ஐ சந்திரசேகர் தனது பூட்ஸ் காலால் உயிர்தடத்திலும் வயிறு நெஞ்சுப் பகுதியிலும் ஓங்கி ஓங்கி உதைத்துள்ளார். காவலர் குமார் குனியவைத்து முதுகில் முழங்கையால் ஓங்கி ஓங்கி குத்தியுள்ளார். எஸ்.ஐ சந்திரசேகர் லத்தியால் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்திருக்கிறார். பின்னர் நாங்கள் அடித்ததை வெளியே சொன்னால் உன் மீது கேஸ் போட்டு உள்ளே போட்டுவிடுவோம் என்றும் உன் அப்பனுக்கும் இதே மாதிரி அடிவிழும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். இதை குமரேசன் அரசு மருத்துவமனையில் டாக்டரிடம் சொல்லும்போதுதான் அவரது தந்தைக்கும் தெரிய வந்தது.

இந்த கொடூரமான மனிதத்தன்மையற்ற செயலை குமரேசன் யாரிடமும் சொன்னால் தனது அப்பாவையும் காவல்துறையினர் அப்படி அடித்துவிடக்கூடாது என்பதற்காக யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டார். சிகிச்சை எடுத்துக்கொண்டால் உறவினர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் மருத்துவமனைக்கும் போகவில்லை. இதனால் சுமார் ஒரு மாதம் கழித்து அடிபட்டதில் உள்காயங்கள் உடலில் பாதிப்பை உருவாக்கி இரத்த வாந்தி எடுத்த பின்னரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் தாக்கியதில்தான் தனக்கு இந்தநிலைமை என்று குமரேசன் டாக்டரிடம் சொன்ன போதுதான் அவரது அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்தது. பின்னர் 14.6.2020 அன்று வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் குமரேசனிடம் விசாரித்துவிட்டு புகார் வாக்குமூலம் எதுவும் பெறாமலே சென்றுவிட்டனர்.

மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 19.6.2020 அன்று மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோருக்கும் மனுவை குமரேசனின் அப்பா தபாலில் அனுப்பியுள்ளார். காவல்துறை தரப்பில் இருந்து மனுவை திரும்பபெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவரது அப்பா மறுத்துவிட்டார். 

இந்த நிலையில் குமரேசன் கடந்த 27.6.2020 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் இரவு 8.00மணியளவில் இறந்துவிட்டார். இதனை கேள்விபட்ட வீரகேரளம்புதூர் பொதுமக்கள் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்று இரவே சாலை மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவதாக ஒத்துக்கொண்டனர். அதன்படி குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 174(3)ன் கீழ் வழக்கு பதியப்பட்டது. மறுநாள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் குற்றம் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். குமரேசனின் மரணத்திற்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் ஆகியோர் மீது கொலைவழக்கு பதிவு செய்து சட்டப்பூரவமாக உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் மனித தன்மையற்ற இந்த கொடூர செயலை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் ஜூலை 8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

அன்புடன்

கே.ஜி.பாஸ்கரன்

சிபிஐ(எம்)மாவட்டச் செயலாளர்

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...