தென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்!

சிபிசிஐடி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தென்காசி, வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர்  27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு முழுக்க, முழுக்க வீரகேளம்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவாக நடந்ததுள்ளது என உயிரிழந்த குமரேசனின் தந்தை நவநீதிகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறியுள்ள புகாரில், 8.5.2020 அன்று ஒரு இடப்பிரச்சனை சம்பந்தமாக வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு வரசொன்னதன் பேரில் குமரேசனும், அவரது தந்தையும் காவல்நிலையம் சென்றதாகவும், விசாரணையின்போது காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குமரேசனை  தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் 10.5.2020 அன்று விசாரணைக்காக குமரேசன் தனியாகவே காவல்நிலையம் சென்றுள்ள போது, உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் தன் மகன் குமரேசனை மிருகத்தனமாக தாக்கியுள்ளதாகவும், 10.6.2020 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், இரத்த வாந்தியும் எடுத்துள்ள நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 27.6.2020 அன்று உயிரிழந்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

குமரேசனின் இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் 174(3) பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்ததுடன், காவலர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் சித்தரவதையால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் தென்காசியில் போலீஸ் விசாரணைக்காக சென்றவர்,  காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்ற புகார் எழுந்துள்ளது. 

எனவே, வீரகேளம்புதூர் போலீஸ் சித்திரவதையால் குமரேசன் உயிரிழந்துள்ளார் என அவரது தந்தை புகார் அளித்துள்ள பின்னணியில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனவும், தவறிழைத்த காவல்துறையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி நாளை (08.07.20200) தென்காசி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...