தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்க – தமிழக முதலமைச்சருக்கு ஜி. ராமகிருஷ்ணன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.4.2017) “விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை களையவும், மணல் அள்ளுவதை முழுவதுமாக தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.


29.4.2017

பெறுதல்:-

மாண்புமிகு. தமிழக முதலைமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்

சென்னை – 600 009.

அன்புடையீர்! வணக்கம்.

பொருள்:-        விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை களையவும் – குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், திருக்கோவிலூர் முதல் பேரங்கியூர் வரை தொடர்ந்து மணல் எடுப்பதை நிரந்தரமாக தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தி என் (ஜி.ராமகிருஷ்ணன்) தலைமையில் 04.05.2017 அன்று திருக்கோவிலூரில் போராட்டம் நடத்துவது தொடர்பாக.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து துவங்கும் தென்பெண்ணை ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு முதல் திருக்கோவிலூர் வரை,  திருக்கோவிலூர் முதல் பேரங்கியூர் வரை –  பேரங்கியூர் முதல் கடலூர் வரை என மூன்று பகுதிகளை கடந்து வங்கக் கடலில்  கலக்கிறது, இதில் திருக்கோவிலூர் முதல் பேரங்கியூர் வரை சுமார் 30 கிலோ மீட்டர் நீளத்தில் மட்டும் கடந்த 2006ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரங்கியூர், ஏனாதிமங்கலம், கப்பூர், ஆவியூர், அந்திலி ஆகிய இடங்களில் மணல் விற்பனை நிலையங்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் கீழ்கண்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

¨           ஒரு இடத்தில் மணல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு பல இடங்களில் அனுமதி பெறாமலேயே மணல் அள்ளி எடுத்து வருகின்றனர்.

¨           அரசு அனுமதித்த ஆழத்திற்கு அதிகமாக 10 மீட்டர் வரை மணலை தோண்டி எடுத்து வருகின்றனர்.

¨           நாள் தோறும் எடுக்கவேண்டிய மணல் அளவைவிட கூடுதலாக வாகனங்கள் மூலம் மணல் எடுத்துவருகின்றனர்.

¨           அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிக தொகைக்கு மணல் விற்பனை செய்து வருகின்றனர்.

மணல் எடுப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

¨           ஆற்றின் பல பகுதிகள் ஓடைகளாக மாறியுள்ளது. ஆற்றின் நடுவில் மிகப்பெரிய பரப்பளவிலான ஏரிகள் உருவாகி உள்ளன, கட்டாந்தரையுடன் மணல் எடுத்த இடங்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்து காடுகளாக மாறியுள்ளது.

¨           நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்து வருவதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்று ஓரங்களில் சாகுபடி செய்துள்ள விவசாய பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி வருகிறது. மூன்று போக சாகுபடி செய்துவந்த இப்பகுதியில் தற்பொழுது மழைக்காலங்களில் மட்டும் விவசாயம் செய்யும் வகையில் ஒருபோக சாகுபடியாக மறியுள்ளது.

¨           கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் இக்காலங்களில் தடையில்லாமலும் விதிமுறைகளை மீறியும் ஒரு நாளைக்கு 500 லோடுவரை வாகனங்கள் மூலம் மணல் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஆற்று ஓரங்களில் உள்ள 500 கிராமங்களின் குடிநீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது.

¨           விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற மக்களுக்கு 50க்கும் அதிகமான கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக போதிய குடிநீர் கிடைக்காமல் அளவுக்குறைவாக தண்ணீர் கிடைப்பதால் தினசரி குடிநீர் விநியோகம் செய்யமுடியாமல் வாரம் ஒரு முறையே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.

¨           ஆற்றுக்குள் நகரங்களின் கழிவு நீர் விடப்படுகிறது. மருத்துவ கழிவுகளும், தொழிற்சாலைகளின் கழிவுகளும் தினந்தோறும் கொட்டப்படுகிறது. இதனால் ஆறு மிகப்பெரிய அளவில் மாசுபட்டுள்ளது

எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

¨           தென்பெண்ணை ஆற்றில் திருக்கோவிலூர் முதல் பேரங்கியூர் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட முறைகேடுகளுடன் நடைபெறும் மணல் கொள்ளையால் ஆறு மணல் அற்ற கட்டாந்தரையாக மாறி கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றை பாதுகாப்பதற்காக அங்கு நடந்து வரும் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

¨           விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீர் ஆதாரங்களை உருவாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், ஆற்றின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கவேண்டும்.

¨           திருக்கோவிலூர் முதல் பேரங்கியூர் வரை மணல் எடுப்பதை நிரந்தரமாக தடைசெய்யவும் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

¨           தென்பெண்ணை ஆறு மாசுபடுவதை முழுமையாக தடுக்கவேண்டும், ஆற்றின் இருகரை ஓரங்களிலும் தண்ணீரை உறிஞ்சும் சீமைக் கருவேலம் மரங்களை அப்புறப்படுத்தவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 04.05.2017 அன்று திருக்கோவிலூரில் எங்களது கட்சியின் சார்பில் என் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

(ஜி. ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...