தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம்!
நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள இஎம்எஸ் அகாடமியில் ஜனவரி 17-19 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்க!

‘2019 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு’ எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் கிளர்ச்சிப் போராட்டங்களை கட்சியின் மத்தியக்குழு பாராட்டுகிறது. இச்சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதைச் சட்டமாக்கி இருப்பதால் இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். அரசமைப்புச் சட்டத்தில் இயற்றப்பட்டுள்ள இந்தியக் குடியுரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரித்து வீழ்த்துகிறது.

இதை எதிர்த்து நடைபெற்று வரும் மக்கள் இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சாமானியர்களும் கலந்து கொண்டிருப்பதிலிருந்து குடியுரிமைத் திருத்தச் சட்டம் நம் அரசமைப்புச் சட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இப்போராட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களுக்குக் கண்டனம்

கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியாக நடக்கின்றன. ஆனால் காவல்துறையோ வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. நாட்டில் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதை மத்தியக்குழு கண்டிக்கிறது. ஜாமியா மிலியாவில் போலீசார் அட்டூழியம் புரிந்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள், வெளியேயிருந்த ஆயுதந்தாங்கிய குண்டர்கள் உள்ளே வந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் தொடுப்பதற்கு போலீசாரே வசதி செய்து தந்திருக்கின்றனர். போலீசாரின் நாசவேலைகள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதும் மற்றும் பல்வேறு இடங்களிலும் கொடூரமான முறையில் தாக்கிக் காயங்கள் விளைவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.

பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலும், போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியிலும் நடந்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் 21 பேர், அசாமில் 5 பேர், கர்நாடகாவில் 2 பேர் என அனைத்து மாநில அரசாங்கங்களும் பாஜக ஆளும் அரசாங்கங்களாகும். உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையினர், அமைதியாகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், வீடுகளைச் சூறையாடியும், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதுடன், தாங்கள் அரங்கேற்றிய வன்முறை நிகழ்வுகளுக்கு, அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குகளும் ஜோடித்திருக்கின்றனர்; அபராதங்கள் விதித்திருக்கின்றனர்.

இவை அனைத்தும் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒடுக்குமுறை ஆட்சியையே நினைவுபடுத்துகின்றன. கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பழிக்குப்பழி (பத்லா) வாங்குவோம் என்ற உத்தரப்பிரதேச முதலமைச்சரின் கொக்கரிப்பை மத்தியக்குழு கண்டிக்கிறது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையினர் ஊக்கம் பெற்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப் பதிவேடு

2003ல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜக கூட்டணி அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொகுக்கப்பட உள்ளது. இது, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான அடிப்படையாகும்.

2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று அரசிதழ் அறிவிக்கை தெரிவிக்கிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், அதன் அடிப்படையில் தயாரிக்கப்படவிருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழை மக்கள், பழங்குடியினர், தலித்துகள், வீடற்றவர்கள், ஊனமுற்றவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் இதர விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்தினரைக் குறிப்பாக பாதித்திடும்.

இவர்களில் பலரால், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களைக் கொணர்வது சாத்தியமில்லை. எனவே, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு சம்பந்தமாக கணக்கு எடுப்பவர்கள் வீடுகளுக்கு வருகிறபோது, அவர்கள் கேட்கிற கேள்விகள் எதற்கும் பதிலளித்திட வேண்டாம் என்று நாட்டு மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கேட்டுக் கொள்கிறது.

கணக்கு எடுக்க வருகிறவர்கள், இரண்டு வகையிலான கேள்வித் தாள்களை வைத்திருப்பார்கள். ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்புக்கானது (சென்சஸ்). மற்றொன்று தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கானது. சென்சஸ் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்திடலாம். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்திடக் கூடாது.

சென்சஸ் – ஆம், தேசிய மக்கள் தொகைப்  பதிவேடு – இல்லை

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்து கேட்கும்போது, “நாங்கள் பதிலளிக்க மாட்டோம்”  என்று சொல்லுங்கள். மேலும் “இது தொடர்பான ஆவணங்களையும் காட்ட மாட்டோம்” என்றும் சொல்லுங்கள்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினை விளக்கி, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்திடக் கூடாது என்று கூறி வீடு வீடாகச் சென்று நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி கிளைகளும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியக்குழு அழைப்பு விடுக்கிறது.

அடைப்புக் காவல் மையங்கள் கூடாது

அடைப்புக் காவல் மையங்களைக் கட்ட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இத்தகைய அடைப்புக் காவல் மையங்களைக் கட்டக்கூடாது என்றும் அனைத்து மாநில அரசுகளையும் கட்சியின் மத்தியக் குழு கேட்டுக் கொள்கிறது. ஏற்கனவே அசாம் மாநிலத்தில் உள்ள அடைப்புக் காவல் மையங்களையும் கைவிட வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் அனைவரையும் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதித்திட வேண்டும் என்றும் மத்தியக் குழு கேட்டுக் கொள்கிறது.

முப்படைத் தளபதியின் மூர்க்கத்தனமான அறிக்கை

ராணுவத் தளபதி (தற்போது முப்படைத் தளபதி) ஜெனரல் பிபின் ராவத், நாட்டில் உள்ள இளம் குழந்தைகள் உட்பட மக்கள் தீவிரவாதத்திற்கு ஆளாவதிலிருந்து தடுப்பதற்காக, “தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கும்” முகாம்கள் (“de-radicalisation ” camps), அதிலும் குறிப்பாக காஷ்மீரில் தேவை என்று கூறியிருப்பதற்கு, கட்சியின் மத்தியக்குழு கடுமையான விமர்சனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய முகாம்கள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இத்தகைய முகாம்கள் இருக்கின்றனவா என்பதை மோடி அரசாங்கம் தெளிவுபடுத்திட வேண்டும். முப்படைத் தளபதியின் கூற்றுப்படி, இத்தகைய முகாம்களை ராணுவம் நடத்திக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டு, இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதையும் விளக்கிட வேண்டும். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக சட்டவிரோதமானவையாகும்; மனித உரிமைகளை மீறும் செயல்களாகும்.

ஜம்மு-காஷ்மீர்

இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணைக்கப்பட்ட சமயத்தில் அம்மாநில மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழிகளை மதித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கட்சியின் மத்தியக்குழு கோருகிறது. அங்கே மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட பெரும்பாலான அரசியல் தலைவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கானோர் சிறைக்காவலில் அடைக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாகின்றது. இவர்களில் சிலர் மிகவும் கொடூரமான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Safety Act) கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்தியக்குழு வலியுறுத்துகிறது.

அங்கே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், தகவல் தொடர்பு மற்றும் பொதுப் போக்குவரத்து மீதான தடைகள் இன்னமும் தொடர்கின்றன. ஜம்மு-காஷ்மீர் பொருளாதாரம்  மிகப்பெரிய அளவில் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக மக்கள் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் திணிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், மற்றவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இணையத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு மீதான கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கட்சியின் மத்தியக்குழு வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்தியக்குழு வற்புறுத்துகிறது.

பொருளாதார நெருக்கடி 

மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நுகர்வோர் செலவினம் கிராமப்புறங்களில் 2017-18 இல் 8.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தியை உருவாக்குவதன் மூலம்தான் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும். இதற்கு மூடிய ஆலைகளைத் திறந்து, குடும்பங்களின் கைகளில் பணப்புழக்கத்தை செய்து, மக்களுக்கு வாங்கும் சக்தியை அளித்திட வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், கார்ப்பரேட் வரிகளை வெட்டி பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.

இவ்வாறு அளித்துள்ள 2.15 லட்சம் கோடி ரூபாய் சலுகைகளை நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக பொது முதலீட்டில் ஈடுபடுத்தியிருந்தால், அதன் மூலம் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை அளித்திருக்க முடியும். இது உள்நாட்டில் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரிக்க இட்டுச்சென்று, பொருளாதார வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும்.

எனினும், மோடி அரசாங்கம், அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வழிவகைகளைச் செய்து தருவதற்குத்தான் உறுதி பூண்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மறுக்கிறது. இதன்மூலம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களை வறுமைக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

கேரளாவிற்கு எதிராகப் பாரபட்சம்

மத்திய அரசாங்கம், கேரளாவின் நிதித் தேவைகளுக்கு எதிராக பாரபட்சமான முறையில் எதிர்மறையான அணுகுமுறையோடு நடந்து கொண்டு வருகிறது. கேரளாவிற்கு 24,915 கோடி ரூபாய் 2019-20ஆம் ஆண்டுக்கான பொதுக் கடன் தொகை வழங்கிட வேண்டும். ஆனால் இதனை தன்னிச்சையாக 16,602 கோடி ரூபாய் என மத்திய அரசு குறைத்திருக்கிறது. டிசம்பரில் அளிக்கப்பட வேண்டிய, ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை 1600 கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை.

மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை 1,215 கோடி ரூபாய் மற்றும் நெல் கொள்முதலுக்கான 1,035 கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை. கேரளாவில் ஏற்பட்ட தேசியப் பேரிடர் நிவாரணத்திற்காக கேரள அரசு கோரியிருந்த 2,100 கோடி ரூபாயையும் மத்திய அரசு மறுத்திருக்கிறது.

மத்திய அரசு இத்தகைய பாரபட்சமான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வலியுறுத்துகிறது. பல்வேறு இனங்களின்கீழ் கேரள அரசுக்கு ஒதுக்க வேண்டிய தொகைகளை அளித்திட வேண்டும். 2019இல் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலத்திற்கு, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

மத்தியக் குழு அறைகூவல்

1. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு,தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும்,இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் நடைபெறும் அனைத்து கிளர்ச்சிப் போராட்டங்களுக்கும் முழுமையான ஆதரவினை மார்க்சிஸ்ட் கட்சி உரித்தாக்கிக் கொள்கிறது. அவற்றில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுகிறது.

2. கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவினையும் மத்தியக்குழு அளிப்பதுடன் அவற்றை வலுப்படுத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறது.

  •  ஜனவரி 23-நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம். அவரது தலைமையின் கீழ், இந்திய தேசிய ராணுவத்தால் உருவாக்கப்பட்ட “ஜெய் ஹிந்த்” என்னும் முழக்கம் நாட்டு மக்களின் வாழ்த்து முழக்கமாக         மாறியிருக்கிறது. செங்கோட்டையில் நடைபெற்ற வரலாற்றுச்சிறப்புமிக்க இந்திய தேசிய ராணுவ விசாரணையில், “சாகல், தில்லான், சஹனாவாஸ்” என்னும் முழக்கம் எதிரொலித்தது. இது மக்கள் மத்தியில், நம் நாடு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்கிற தெளிவை அளித்து, மக்களிடையே 1945-46களின் சிரமமான காலத்தில் மக்களிடையே மத ஒற்றுமையை வலுப்படுத்தியது.
  • ஜனவரி 26 – குடியரசு தினம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை படித்து, நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட உறுதி ஏற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஜனவரி 30-மகாத்மா காந்தி தியாக தினம். மத நல்லிணக்கத்தைப் பேண, அவர் மேற்கொண்ட விடாப்பிடியான பிரச்சாரத்தை உயர்த்திப்பிடித்து இந்தத் தினத்தை அனுசரித்திட வேண்டும்.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகளுக்குச் சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் இவ்வியக்கங்களை வலுவாக நடத்திட வேண்டும், அதிக பட்ச அளவிலான இடங்களில் நடத்திட வேண்டும்.

3. இவை தவிர கீழ்கண்ட பிரச்சாரங்களையும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்: “தேசிய மக்கள்” தொகை பதிவேட்டுக்கு பதில் சொல்ல மாட்டோம் – நாங்கள் பதில் சொல்லமாட்டோம். தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர்கள் அனைவரும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகளை நிறுத்திடவும் அறைகூவல் விடுகிறோம். ஏனெனில் அது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான அடிப்படையாகும். கேரள மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் செய்திருப்பதுபோல் மற்ற அரசுகளும் முன்வர வேண்டும்.

சென்சஸ் கேள்விகளுக்குப் பதிலளிப்போம், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்குப் பதிலளிக்க மாட்டோம் என்று வீடு வீடாகச் சென்று விளக்கிட வேண்டும். அப்போது தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கும் இடையேயுள்ள இணைப்பை விளக்கிட வேண்டும்.

இவ்வாறு வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பிரச்சாரம், என்றென்றும் அழியாமல் நமது நெஞ்சங்களில் வாழும் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்று அவர்களின் தியாகத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்திலும், அவர்களின் லட்சியமான சுரண்டலற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதத்தில், உச்சக்கட்டத்தை அடைந்திட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அடைப்புக்காவல் மையங்களை கைவிட வேண்டும் என்றும், புதிய மையங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் முழங்கிட வேண்டும்.

கட்சியின் வெகுஜன அமைப்புகளை வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் மாபெரும் இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் மக்களின் வாழ்நிலை சம்பந்தமான உடனடிப் பிரச்சனைகளையும் பிரச்சாரம் செய்திட வேண்டும்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...