ஆர்.கே. நகர் சென்னையிலேயே மிகவும் பழம்பெரும் தொகுதியாகும். இங்கு அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கட்சிகள் போட்டியிடும் போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த பகுதி மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
இப்போது களத்தில் நிற்கும் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, திமுக பல்வேறு வாக்குறுதிகளை மீண்டும் கொடுத்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மக்களை சந்திக்கும் போது இதுகுறித்து எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்கிறோம். திமுக, அதிமுக மக்களை நம்பத் தயாரில்லை. அதனால்தான் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். டோக்கன் இங்கே வழங்கப்பட்டு, பக்கத்து தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்து விட்டால் அரசு கட்டிடங்கள், கோயில்கள் இவற்றை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதிமுகவினரின் கார்கள் கோயிலுக்குள்ளேயே நிறுத்தப்படுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றும் கூட இந்த தொகுயில் அடிப்படை பிரச்சினைகள் தீரவில்லை.
இங்கு ஏழை எளிய, அமைப்புசாரா தொழிலாளர்களே அதிகளவில் வசிக்கிறார்கள். மாலை நேரங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்படாததால் இவர்கள் நோய்வாய் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் வேட்பாளர் ஆர்.லோகநாதன் வெற்றி பெற்றால் இந்த கூலித் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் அரசு புறநகர் மருத்துவமனையை மேம்படுத்தி போதிய மருத்துவர்கள் மற்றும் உயர்தர உபகரணங்களுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
இந்த தொகுதியில் 5 மாநகராட்சி மேல்நிலப் பள்ளிகள்தான் உள்ளன. ஆனால் 26 மதுபானக் கடைகள் உள்ளன. இதனால் அந்த மக்கள் தனியார் பள்ளியை நாடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளை அதிகளவில் கொண்டுவரவும், தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
குறிப்பாக கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கால் இந்தப் பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இங்குள்ள குப்பை கிடங்கை அகற்றி, அங்கு சிறு குறுந் தொழிற்சாலைகளுக்கான தொழிற்பேட்டையை உருவாக்க முயற்சி மேற்கொள்வோம். அதேபோல் காசிமேடு பகுதியில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்தவும், மீனவர்களுக்கு நவீன கருவிகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வோம். மீன் ஏற்றுமதி வளாகம் உருவாக்கி ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவோம்.
குறிப்பாக குடிநீர், குடிநீரில் சாக்கடை, ஆயில் கலந்து வருகிறது. இதனால் இங்குள்ள நீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அனைவருக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும், அரசு அறிவித்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வோம். தொகுதிக்கப்பட்ட 38ஆவது வட்டத்தில் சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பு அருகில் உள்ள இடத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்க முயற்சி செய்வோம்.
பணப்பட்டுவாடா செய்வது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் அறவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையம் முதலில் தேர்தலை ஒத்தி வைத்தது. அப்போதும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தலை ரத்து செய்தது. தேர்தலை ஒத்தி வைத்தாலோ, ரத்து செய்தாலோ போதாது. எந்த வேட்பாளருக்காக பணமோ, பரிசுப் பொருட்களோ விநியோகிக்கப்பட்டதோ அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க முடியும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, தேர்தல் ஆணையத்தில் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றார்.
இச்சந்திப்போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாவட்ட செயலாளர் எல்.சுந்தர்ராஜன், வேட்பாளர் ஆர்.லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.