தேர்தலில் கார்ப்பரேட் நிதிக்கு தடை விதியுங்கள் – சீத்தாராம் யெச்சூரி

சீத்தாராம் யெச்சூரி,

பொதுச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

சமீப காலங்களில் தேர்தல்கள் என்பது பணம் படைத்தவர்களின் பக்கம் அதிகமான அளவில் சாய்ந்திருப்பதால் தேர்தல் நிதி எந்த அளவிற்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது இப்போதெல்லாம் வசதி படைத்த வர்த்தகப் புள்ளிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. எனவே இதில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி ஜனவரி 9 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளார்:

முதலாவதாக, தேர்தலுக்காக கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டியது அவசியம். கார்ப்பரேட்டுகள், அதிலும் குறிப்பாக பெரும் கார்ப்பரேட்டுகள். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது என்பதை, தங்கள் சார்பான ஒரு முதலீடாகவே கருதுகிறார்கள், தங்களுக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் அரசின் கொள்கைகளை மிக எளிதாகவும் மிக வேகமாகவும் அமல்படுத்துவதற்கான ஒரு வலுவான வாய்ப்பாகவும் கருதியே நிதி அளிக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தபின்னர் தங்களுக்கு நிதி அளித்த கார்ப்பரேட் நண்பர்களுக்கு பொருந்தக் கூடிய விதத்திலேயே கொள்கைகளை உருவாக்குகின்றன.

இந்த கார்ப்பரேட்டுகள்தான் லஞ்ச ஊழலுக்கு மிகப்பெரிய அளவில் வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள். இது நம்முடைய ஜனநாயக அமைப்பையே அரித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்குத் தடை விதிக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. 1968லிருந்து கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கு இருந்து வந்த தடையை 1985 இல் அரசாங்கம் மாற்றியமைத்தது. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் பணம் அல்லது கறுப்புப் பணம் நிதியாக வந்து சேர்வது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசியல் கட்சியின் செலவுக்கு என்ன வரையறை? தற்சமயம், தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கு ஒரு வரையறை இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செலவு செய்வதற்கு வரையறையே இல்லை. இது தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவு குறித்த வரையறையைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடுவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவர வேண்டும், இதனை மீறும் அரசியல் கட்சிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்பு இந்திய சமூகத்தின் வலுவான இதர பிரிவினரைப் போலவே கார்ப்பரேட்டுகளும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்குக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை தேர்தல் செலவினங்களுக்காக அரசாங்கத்திடம் வழங்கிட வேண்டும். அரசாங்கத்திடம் நிதி அளித்து, அதில் குறைந்த பட்சம் ஒரு கணிசமான பகுதி தேர்தலுக்குச் செலவிட வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டுவராமல், அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நிதி அளிப்பதன் மூலம் ஊழலை ஒழித்திட முடியாது. இதனை தினேஷ்கோஸ்வாமி குழுவும், இந்திரஜித் குப்தா குழுவும் ஆழமான முறையில் ஆய்வு செய்து பரிந்துரைத்திருக்கின்றன. அதேபோன்று, கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது சமூகப் பொறுப்பு என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் உருவாக்கி, அதில் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக அளித்திடக் கேட்டு கொள்ளப்படலாம்.

அத்தகைய பொதுநிதியத்திலிருந்து எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை, அவை முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அல்லது அவை வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் முடிவு செய்திடலாம். இவ்வாறு செய்வது என்பது இந்திய ஜனநாயகம் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதற்கு வழி வகுத்திடும். இதுவே இப்போதுள்ளதை விட, ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை உடையதான முறையாக அமைந்திடும். உதாரணமாக, ஜெர்மனியில் அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. கட்சிகள் முந்தைய தேர்தலில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெற்றுள்ள இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் வசூலித்த நிதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதி வந்து சேர்வது மேலும் வெளிப்படைத் தன்மையுடன் அமைந்திட வேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்தல் பத்திரங்களின் ரகசியமும் மோசடியும் சமீபத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நடைமுறைகள், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் தேவைப்படும் தூய்மை மற்றும் வெளிப் படைத்தன்மையை முற்றிலுமாக மறுதலிக்கக் கூடிய விதத்திலேயே அமைந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பது மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும். இதன் மூலம் நன்கொடையாளர், நன்கொடையைப் பெற்றவர், நன்கொடை அளிக்கப்பட்ட தொகை ஆகிய மூன்றுமே நடைமுறையில் அரசின் ரகசியமாக மாறிவிடுகிறது. இது ஆளும் கட்சிக்கு நிதி கொடுப்பவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடுகிறது. மேலும் கம்பெனிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் இருந்த உச்சவரம்பை அகற்றிவிட்டதன் மூலம், அவர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கான வழிவகையினை மிகச்சிறப்பாக செய்து தந்திருக்கிறீர்கள். இது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகவும் ஆழமான முறையில் கேடு விளைவித்திடும். ஒரு நிதிச்சட்ட முன்வடிவின் மூலமாக, அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டு வந்த திருத்தத்தின் மூலம், உங்களது அரசாங்கம் அந்நிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் கஜானாக்களை நிரப்பிட வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடிய ஓர் அபாயகரமான நடவடிக்கையாகும்.

தேர்தல் பத்திரங்களும், அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டுவந்த திருத்தமும் (இது அந்நிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை அனுமதிக்கிறது), கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கு இருந்து வந்த உச்சவரம்பை நீக்கியதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளாகும். இவை அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். தேர்தல் நிதி தொடர்பான இந்த உரையாடல் ஓர் ஆழமான விவாதத்திற்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். விவாதங்கள் மேற்கொண்ட பின்னர் உங்கள் அரசாங்கம் ஒருங்கிணைந்த தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

(நீங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது, நாங்கள் முன்வைத்த ஒரு பகுதி பிரதிநிதித்துவ அமைப்பு முறையை வரவேற்றீர்கள். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர், இப்போதுள்ள நடைமுறையே உங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதால், அதன் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை என்றே தோன்றுகிறது.) இந்தப் புத்தாண்டில், உங்கள் அரசாங்கம் நம்முடைய ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்த விதத்தில் புதிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போதுதான் இப்போது பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை மாறி, சாமானியர்களும் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகும்.

Click to read english version

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...