தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து – தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 கோடியும் விநியோகித்திருப்பதாக சிறப்பு பார்வையாளர்களுக்குப் புகார்கள் போயுள்ளன என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 22ம் தேதியே, அன்புநாதன் வீட்டிலிருந்து ரூ.4.77 கோடியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி வீட்டிலிருந்து ரூ.1.98 கோடியும் வருமான வரி துறையால் கைப்பற்றப்பட்டது. அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றியிருக்கின்றன என்ற மக்கள் நல கூட்டணியின் விமர்சனம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கவலை வெறும் சம்பவமல்ல, பெரும் அசம்பாவிதத்தைக் குறிக்கும் விஷயமாகும். 2 தொகுதிகளில் நிலைமை வெளி வந்துள்ளது. 232ன் நிலைமையும் அதுவாகத் தானே இருக்க முடியும்? குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே நிறுத்த வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் பண விநியோகம் நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. வாக்குகளுக்குப் பணம், எதிர்க்கட்சி ஊழியர்களை விலைக்கு வாங்க அல்லது முடக்க பணம், செய்திகள் இடம்பெறுவதற்காக சில நாளிதழ்களுக்குப் பணம், ஆரத்தி எடுப்பவர்கள், ஓட்டு கேட்டு வருபவர்கள், வேட்பாளருடன் உடன் செல்பவர்கள், இறுதி நாள் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு வருபவர்களுக்குப் பணம் என்று சகல விதத்திலும் திமுக அதிமுகவினரால் பணம் அள்ளி வீசப்பட்டிருக்கிறது. பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழிகளை இவர்கள் உண்மையாக்கி, தேர்தல் என்ற ஜனநாயக நிகழ்முறையை சீரழிவின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால், காண்ட்ராக்டுகள் மூலம் வருமானம், கட்ட பஞ்சாயத்துகள் மூலம் வருமானம், ஆளும் கட்சியாக இருந்தால் கூட்டுறவு அமைப்புகளைக் கைப்பற்றி அவற்றின் மூலம் கொள்ளை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அப்பதவிகள் மூலம் கொள்ளை என்று, தேர்தல் என்பது மேலிருந்து கீழ் வரை பணப்பலனை அளிக்கிற நடவடிக்கையாக மாறி விட்டது. ஜனநாயகம் என்பது பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம அந்தஸ்தை அளிக்கும் நடைமுறை என்ற நிலை பின்னுக்குப் போய் விட்டது. தேர்தல் முடிவை தீர்மானித்தது பணப்பட்டுவாடா மட்டுமே என்று சொல்ல முடியாது. ஆனால் பணப்பட்டுவாடா மிக முக்கியமான பங்கை வகித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கொள்கையை சொல்லி, அரசியலை சொல்லி வாக்கு சேகரிக்கும் வெளி குறைந்து கொண்டே வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது. இதைத் தடுக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. பண விநியோகம் செய்யும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வது, அடுத்து சில காலத்துக்குப் போட்டியிட தடை விதிப்பது, கிரிமினல் நடவடிக்கை எடுப்பது,  அரசியல் கட்சிகளின் மாநில / தேசிய அந்தஸ்து பாதிக்கப்படும் என்ற நிலையை உருவாக்குவது போன்ற ஆலோசனைகளைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்வைக்கும், ஆதரிக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறையாக்குவது குறித்தும் நாடு தழுவிய விவாதத்தை உருவாக்கி, மக்களின் ஆலோசனைகளையும் பெற்று உரிய நடவடிக்கைகளை அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். பகுதி பட்டியலுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம், தேர்தல் செலவினங்களை ஆணையமே ஏற்பது போன்றவற்றை நாடாளுமன்றம் சட்டமாக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123, ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் குற்றங்களை வரையறுத்துள்ளது. இது நடைமுறைக்கு வர வேண்டும்.

மேலும் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலைத் தொடர்ச்சியாகவும், வெளிப்படை தன்மையுடனும் திருத்துவது, தேர்தல் பார்வையாளர்களின் தேர்வு மற்றும் நியமனம் குறித்த வெளிப்படைத் தன்மையை உத்தரவாதம் செய்வது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முறையாக வரையறுத்து, அரசியல் பாகுபாடு மற்றும் உள்நோக்கம் இல்லாத செயல்பாட்டை உறுதி செய்வது, தேர்தல் ஆணையர், பதவிக் காலம் முடிந்த பிறகு அரசு பணி, ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளுக்கு வருவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்டமாக வேண்டும்.

மொத்தத்தில் அனைத்து கட்சிகளும் சம தளத்தில் நின்று மக்களின் வாக்குகளைக் கோரும் நிலையையும், தேர்தல் ஆணையத்தின் பாகுபாடற்ற செயல்பாட்டையும் உருவாக்க மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும்.

 

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...