தேர்தல் நடைமுறையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்கள்

சீத்தாராம் யெச்சூரி கடும் எதிர்ப்புநாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவதில், தேர்தல் நடைமுறைகளை மாற்றி, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி நாட்டில் இதுவரை நிறுவப்பட்டிருந்த நடைமுறையான, அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசித்தே, தேர்தல் நடைமுறைகளில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர வேண்டும் என்கிற நடைமுறையை ஓரங்கட்டிவிட்டு, அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல், 64 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்திட, ஒருதலைப்பட்சமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பது, மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வேட்புக்கு இணங்க, சட்ட அமைச்சகம், நாடாளுமன்ற/சட்டமன்றங்களுக்கான தேர்தல்களின்போது, ஊனமுற்றோர்களும், 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் அஞ்சல் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு அனுமதி அளித்து, தேர்தல் நடத்தை விதிகளில் முன்னதாகவே திருத்தங்கள் செய்திருப்பதாகவும், அறிகிறோம். பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையம் அரசாங்கத்தை அணுகி, கோவிட்-19 தொற்று காரணமாக விதியை மேலும் திருத்திட கோரியதாகவும் அறிகிறோம். அதைத்தொடர்ந்து, ஜூன் 19 அன்று சட்ட அமைச்சகம் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் அஞ்சல் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதித்திட வேண்டும் என்று புதிதாக அறிவிக்கை வெளியிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. திருத்தப்பட்ட விதிகள், “கோவிட்-19-ஆல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர் அல்லது சந்தேகத்திற்குரியவர்”-களும் அஞ்சல் வாக்குகளுக்கு விருப்பம் தெரிவித்தால் அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறது.

கடந்த காலங்களில், அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைக்கிணங்க ‘தேர்தல்களின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை’ ஆகியவற்றிற்காக, அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் விரிவான அளவில் அதிகாரங்கள் பெற்றிருந்தபோதிலும், இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்தை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தக்கூடாது என்றே எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த நடைமுறை, மக்களைப் பிரதிநிதித்துவப்படும் பிரதான பங்குதாரர்களாக அரசியல் கட்சிகளை அங்கீகரித்திடும் மிகவும் ஆரோக்கியமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. அவர்கள் தேர்தல்கள் நடத்துவதற்கான நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யும்போது, ஒரு கருத்தொற்றுமையை உருவாக்குவதற்குத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.

அனைத்துவகையான அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமை மூலமாகத்தான் மாதிரி நடத்தை விதி (Model Code of Conduct) என்கிற பெரிய அளவிலான தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவுகூர்வது பொருத்தமானதாக இருக்கும். இதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் எதுவும் இல்லை என்றாலும்கூட, இந்த நடைமுறையை எவரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. இந்த நடைமுறை தேர்தல் அமைப்புமுறையில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தி, விரிவான அளவில் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.
இத்தகுக் கடந்த கால நடைமுறைக்கு முரணாக, 2019 அக்டோபரிலும், 2020 ஜூன் 19 அன்றும் இவ்வாறு விதிகளில் மாற்றங்கள் செய்திருப்பது, அரசியல் கட்சிகள் எதனுடனும் எவ்விதமானக் கலந்தாலோசனையும் செய்யாது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊடகங்களில் வந்துள்ள தகவல்களிலிருந்து, 2020 நவம்பரில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக இத்தகு நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவே நாங்கள் ஊகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம்முடைய தேர்தல் அமைப்புமுறை ஒருமைப்பாட்டின் அடிநாதமாக வாக்காளர்களை நேரடியாக சரிபார்ப்பதையே (physical verifiabiity) எப்போதும் கருதி வந்திருக்கிறது. விதிகளில் இப்போது செய்யப்பட்டுள்ள இரு திருத்தங்கள், வாக்காளர்களில் மிகப்பெரிய அளவிலானவர்களை இவ்வாறே நேரடியாக சரிபார்ப்பதிலிருந்து ஒழித்துக்கட்டி விடுகிறது. இந்தத் திருத்தங்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவைகளாகும். ஏனெனில், தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் குறைந்த எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்குகளேகூட எந்த அளவிற்கு மோசடியாகவும் தில்லுமுல்லுகளுடனும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பதற்கு ஏராளமான எடுத்தக்காட்டுகள் இருக்கின்றன.

வாக்காளர்களில் மிகப்பெரிய அளவில் நேரடியாகச் சரிபார்த்தலை ஒழித்துக் கட்டும் நடைமுறையைக் கொண்டுவரும், புதிய வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தற்கு மத்தியில் கருத்தொற்றுமை உருவாக வேண்டியது அவசியமாகும். அதன்மூலம்தான் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுவர முடியும். தற்போதைய நிர்வாகம், அஞ்சல் வாக்குகளை எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடும் என்று குறிப்பிட வேண்டிய தேவை இல்லை.

ஏற்கனவே தேர்தலுக்கு நிதி அளிப்பதன் மீது தேர்தல் பத்திரங்கள் ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்றம், எவ்விதமான தீர்ப்பும் பிறப்பிக்காமல் இன்னமும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தேர்தல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் வருமானம்/செலவினங்கள் குறித்து கண்காணிப்பதிலும் மேற்பார்வை செய்வதிலும் இது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இப்போது புதிதாக அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பது ஆளும் கட்சிக்கு ஆதரவாக கணிசமான அளவிற்கு நிலைமையை மேலும் உருவாக்குவதற்கே இட்டுச் செல்லும்.
எனவே, நாட்டில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதை அடிப்படைக் கொள்கையாகத் தொடர்ந்து நீடித்திட, அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உத்தரவாதப்படுத்திட, காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைகளையே உயர்த்திப்பிடித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல் இத்தகைய மாற்றங்களை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்துவதை தொடரக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை ஆக்கபூர்வமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...