தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன்.


அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.
நாடெங்கும் மருத்துவக்கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களில் எல்லாம் ஆர்டர்கள் குவிந்து கிடந்தன. இன்னொரு பக்கம் ஊரடங்கு இருந்ததால் நிறுவனங்களைத் திறத்து இயக்க முடியாத நிலை. போக்குவரத்துக்கும் பெருஞ்சிரமமான சூழல்.


இந்நிலையில் நமக்கான துணைக்கருவிகளை எங்கெங்கிருந்து எவ்வளவு விரைவாக வாங்கிக் கொண்டு வரலாம் என்பதற்கு மருத்துவர் துரைராஜ் தலைமையில் ஒரு குழுவே செயல்பட்டது. கடந்த பத்து நாள்களாக இவர்கள் மிகத்தீவிரமாக பணியாற்றியதன் விளைவே இன்று அனைத்து துணைக் கருவிகளையும் எங்களால் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடிந்தது.
பெங்களூர், ஓசூர் என ஆளுக்கு ஒருபக்கம் வாகனத்தை எடுத்துச்சென்று துணைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் மும்பை வரை கூட வாகனத்தில் போய்த் திரும்ப ஆயத்தமானார்கள்.

தங்களது சொந்த வீட்டுக்குச் செய்யும் உணர்வோடு இப்பணியை மருத்துவர்கள் குழு செய்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா வார்டுக்குத் தேவையான துணைக்கருவிகளின் முக்கியத்துவம் கருதி உரிய மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக, முதலில் கொடுத்த நிர்வாக உத்தரவில் தற்கவச ஆடை (PPE) 250 என்றுதான் கொடுத்திருந்தோம். ஆனால் அதுதான் கொரொனா வார்டுக்கு மிக அவசியான தேவையாகவும், நாள்தோறும் 150க்கும் மேல் தேவைப்படுவதாகவும் இருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் தேவையான ஒன்றாக தற்கவச ஆடை (PPE) இருந்தது. எனவே 250 என்பதனை மாற்றி 3000 என்று முடிவு செய்தோம். அதேபோல மூன்றடுக்கு முகக்கவசம் 10000 என்று இருந்ததை மாற்றினோம்.

அந்த வகை முகக்கவசம் போதுமான அளவிற்கு இருப்பு இருக்கிறது. எனவே, அதனை வாங்காமல், N-95 முகக்கவசம் 1000த்தை 2000மாக உயர்த்தினோம். அதே போல Multipara monitor 3 என்ற எண்ணிக்கையை 10 என உயர்த்தினோம். இப்படி, தேவையைக் கருதி துணைக்கருவிகளின் எண்ணிக்கையில் உடனுக்குடன் மாறுதல் செய்தோம். இடையில் எந்த இடைத்தரகருக்கும் வேலை இல்லாததால் மிகக்குறைந்த விலையில் அனைத்துத் துணைக்கருவிகளையும் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்க முடிந்தது.


அரசினை விமர்சிப்பது மட்டும் எங்களின் வேலையில்லை. மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்திக் காட்டும் பொறுப்பும் எங்களுக்குண்டு. அரசு இராஜாஜி மருத்துவமனைக்குப் போதுமான துணைக்கருவிகளைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்ற உணர்வு இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மேலோங்கி இருந்தது. அந்த உணர்வும் அக்கறையுமே இந்தப் பணியை நெருக்கடி மிகுந்த இந்தக் காலத்திலும் சிறப்பாகச் செய்துகாட்ட முடிந்துள்ளது.


தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா வார்டுக்குத் தேவையான துணைக்கருவிகளை வாங்க நிதி வழங்கியுள்ளனர். ஆனால், என்னென்ன துணைக்கருவிகளை வாங்குவது என்பதையே பெரும்பாலான மாவட்டகளில் நிர்வாகம் இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது அல்லது ஓரிரு நாள்களுக்கு முன்னர்தான் முடிவு செய்துள்ளது. அந்த துணைக்கருவிகள் எல்லாம் வந்து சேர இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம். எங்கே மக்கள் பிரதிநிதிகள் கூடுதலாக தலையிட்டுள்ளனரோ அங்கு வேலைகள் சற்று வேகமாக நடந்துள்ளது.


இந்த நிலையில், “எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மொத்தமாக பறித்துக்கொண்டார் நாட்டின் பிரதமர்.
அவர் பறித்துக் கொண்டது நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தன்று, நாட்டு மக்களிடமிருந்து. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரொனா வார்டுக்குத் துணைக்கருவிகள் வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்த 24 மணிநேரத்துக்குள் வேலையைத் தொடங்கி பத்து நாள்களில் அனைத்து வகையான துணைக் கருவிகளையும் சிகிச்சையளிக்கும் வார்டுகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம்.

இந்த முயற்சியையும் மக்களுக்கு உடனடியாக கிடைக்கும் இந்த பலனையும் தட்டிப்பறித்து இருக்கிறது மத்திய அரசு.
இனி எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்வார்கள்.
எப்படி முடிவு செய்வார்கள்?

மேம்பாட்டு நிதி ரத்து என்று முடிவு செய்துள்ள அதே நாளில் மாநில அரசுகளுக்கான நிவாரண நிதியை முடிவு செய்துள்ளனர். உபிக்கு 966 கோடி, தமிழ்நாட்டுக்கு 510 கோடி. தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியை பறித்ததன் மூலம் சுமார் 750 கோடியை மத்திய அரசு நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டுள்ளது; ஆனால், நமக்குக் கொடுத்ததோ வெறும் 510 கோடி. அந்த 510 கோடியும் டில்லியிலிருந்து சென்னை வந்து சேர வேண்டும். பின்னர் பலமட்ட நிர்வாக உத்தரவுக்குப் பின் மாவட்ட எல்லைக்கு வந்து சேர வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் கைகளில் இருக்கும் நிதியை முடிவு செய்யவே இவ்வளவு நாள்களாகும் நமக்கு, இனி என்னைக்கு இவை எல்லாம் வந்து சேர? நம்மை, தாக்கிக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் மட்டுமல்ல, என்பதை அரசின் பல்வேறு அறிவிப்புகளிலிருந்து தொடர்ந்து உணர முடிகிறது. என்ன செய்ய. . . நாம் கொடுங்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சு.வெங்கடேசன். எம்பி

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...