தொல். திருமாவளவன் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்

கடந்த 4 -5-2016 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தான் போட்டியிடும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக திருமுட்டம் அருகிலுள்ள சாவடிகுப்பம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சாதி வெறி வன்முறைக் கும்பலைச் சார்ந்தவர்கள் அவரை தாக்குவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக தொல். திருமாவளவனுடன் சென்ற காவல்துறையினர் சாதிவெறி வன்முறைக் கும்பலை விரட்டிய போது, அவர்கள் தொல். திருமாவளவன் சென்ற பிரச்சார வாகனத்தின் மீது கல் வீசித் தாக்கியிருக்கிறார்கள்.

மேலும், தொல் திருமாவளவன் சென்ற வாகனத்திற்கு முன்னால் டிராக்டரை நிறுத்தி அவரைத் தாக்குவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். உரிய நேரத்தில்  காவல்துறையினர் தலையிட்டதாலும், தொல் திருமாவளவன் நிதானமான அணுகுமுறையைக் கையாண்டதாலும் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாதி வெறி வன்முறைக் கும்பலைச் சார்ந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தொல் திருமாவளவனைத் தாக்க முயற்சித்தது. ஆனால் தாக்குதலில் பலர் ஈடுபட்ட போதிலும், இருவர் மீது மட்டுமே  காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் சாதி மோதலைத் தூண்டும் நோக்கத்தோடு தொல் திருமாவளவனைத் தாக்க  சாதி வெறி வன்முறைக்கும்பலைச் சார்ந்தவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

இந்த சாதி வெறி வன்முறை அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், சாதி வெறி வன்முறையாளர்களின் தகாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தேர்தல் அமைதியாக நடைபெற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...