தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!

கொரோனா தொற்று உழைப்பாளிகள் மற்றும் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வை சிதைத்துள்ள நிலையில் இதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் சில முதலாளி சங்கங்கள் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை, தேசத்தின் நலன் என்ற முகமூடியோடு பறித்திட முனைந்துள்ளன. மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கிற பாஜக அரசு ஏற்கெனவே, தொழிலாளர்கள் போராடி பெற்ற பல உரிமைகளை சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்துக் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒத்திசைவு பட்டியலில் தொழிலாளர் நலன் இருப்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு சில மாநில அரசுகளும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அறிவிக்கை செய்துள்ளன.

கூடுதலாக பணிபுரியும் 4 மணி நேரத்திற்கு 2 மடங்கு சம்பளம் என்பதற்கு பதிலாக விகிதாச்சார முறையில் வழக்கமான சம்பளமே கொடுத்தால் போதும் என்று அறிவிக்கையினை குஜராத் மாநில பாஜக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்திற்கும், இந்தியா ஏற்றுக் கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும். இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையின்மையை பல மடங்கு அதிகரிக்கும்.

பிரிட்டிஷ் இந்தியாவிலும், விடுதலைக்கு பின்பும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் செய்வதற்கு துணியாத ஒரு அடாத செயலை தற்போதைய மத்திய அரசாங்கம் மற்றும் சில மாநில அரசாங்கங்கள் செய்ய துணிந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு முதலாளிகள் சங்கங்களிடமிருந்து வந்துள்ள இத்தகைய ஆலோசனைகளை துச்சமென தூக்கி எறிய வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு இந்த அடாவடிதனத்தை முறியடிக்க முன்வர வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...