தோழர் ஏ.எம்.கோபு மறைவு! மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி !!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபு (82) அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தோழர் கோபு அவர்கள் மறைவுக்கு மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு  அஞ்சலியை செலுத்துகிறது.

தோழர் ஏ.எம்.கோபு மாணவர் பருவத்திலேயே தேச சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். இளமைக்காலத்திலேயே கம்யூனிஸ்ட்கட்சியில் சேர்ந்து தன்னுடைய அர்ப்பணிப்பு கூடிய பணியினால் கட்சியில் பல  உயர் பொறுப்புகளை வகித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஏஐடியுசி சங்க மாநில தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.  ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நிலச்சுவான்தார்களின் பண்ணை அடிமையை எதிர்த்தும், சாதிக் கொடுமையை எதிர்த்தும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி  மகத்தான இயக்கத்தை நடத்தியது.

தோழர் பி.சீனிவாசராவ், அமிர்தலிங்கம், கே.ஆர்.ஞானசம்பந்தம், பி.எஸ்.தனுஷ்கோடி, மணலி கந்தசாமி ஆகிய தோழர்களோடு இணைந்து தோழர் கோபு அவர்கள் அந்நியர் ஆட்சியை எதிர்த்தும், தீண்டாமைக்கொடுமை மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்தும் வீரம் செறிந்த போராட்டங்களில் கலந்து கொண்டார். பலமுறை அந்நியர் ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகி கைது செய்யப்பட்டு, சிறை சென்றவர். 1949-1950  ஆண்டுகளில்  கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது தோழர் கோபு அவர்கள் தலைமறைவாக இருந்து கட்சி பணியாற்றினார். அவரைத் துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். கடைசி வரையில் துப்பாக்கிக்குண்டு அவருடைய கைக்குள் இருந்தது. இத்தகைய அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் தோழர் கோபு அவர்கள்.

நாட்டு விடுதலைக்காக, விடுதலைக்குப் பிறகு நாட்டு மக்கள் நலனுக்காக அயராது போராடிய தோழர் கோபு அவர்களின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு மட்டுமன்றி, ஜனநாயக இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.  அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...

Leave a Reply