தோழர் கே.சி.கருணாகரன் மறைவு சிபிஐ(எம்) மாநிலக்குழு இரங்கல்

கட்சியின் மூத்த தோழரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கேசிகே என்று அழைக்கப்படும் தோழர் கே.சி.கருணாகரன் (வயது 74)உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (அக்.9) நள்ளிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம்.

அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அஞ்சலி செலுத்துவதுடன்  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். துவக்க காலத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் மாநில தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். மாநிலம் முழுவதும் சென்று இளைஞர்களை அணிதிரட்டியவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, நீண்ட காலம் அதன் மாநில நிர்வாகியாக செயல்பட்டவர்.  1997 முதல் 2001 வரை கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர்.  23 ஆண்டு காலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். தற்போது கோவை மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இவர் தலைவராக இருந்தபொழுது, வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி மாநிலந்தழுவிய அளவில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விளைவாக அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் இளைஞர்களுக்கு வேலையில்லா கால  நிவாரணம் அறிவிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  காடம்பாறை மின்நிலைய கட்டுமானப்பணியில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றிய அவர், தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு காடம்பாறை தினக்கூலி தொழிலாளர்களின் நிரந்தரத்திற்காக தோழர் கே.ரமணி அவர்களுடன் தலைமையேற்று போராட்டத்தை நடத்தியவர்.

தோழர் கேசிகே மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் அனைத்துக் கட்சியையும் ஒருங்கிணைத்து, கோவை மாநகரத்தில் அமைதி நிலவவும், மதநல்லிணக்கம் ஏற்படவும் முன்முயற்சி எடுத்தவர்.

2001 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இவர் சட்டமன்ற உறுப்பினராக உறுப்பினராக பணியாற்றிய காலத்தில், கோவை மாவட்டத்தில் வரன்முறை படுத்தாமல் இருந்த இடங்களை  வரன்முறை படுத்த சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து அதை சட்டமாக்க காரணமாக இருந்தவர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்றனர். உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும், பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்.

சிறந்த மேடைப்பேச்சாளர். மிசா காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டவர். 50 ஆண்டுகாலம் முழுநேர ஊழியராக பணியாற்றிய தோழர் கேசிகே அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். எளிமையானவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மகள் செம்மலர், மகன் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கோவை மாவட்ட தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

கலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் ...