தோழர் பி.டி.ரணதிவே – மிகச்சிறந்த உலக கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர்

தோழர் பி.டி.ரணதிவே|B.T.Ranadive

தோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம் – 1904 டிசம்பர் 19, மும்பை

தந்தை – திரியம்பக் மொரேஷ், தாய் – யசோதா

மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் சகவியலில் முதல் மாணவராக தேர்வாகி தங்க பதக்கம் வென்றார். சிறு வயதிலிருந்த அரசியல் ஆர்வம் அவரை ஏந்த வேலையும் தேடாதபடி செய்துவிட்டது…

முதலில் காந்தியால் அரசியலில் ஈர்க்கபட்டார். படிப்பு முடித்து முதுகலைப் பட்டம் பெற்று ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. அதற்குள் கிர்னி காம்கார் யூனியன் என்று அழைக்கப்பட்ட மும்பை பஞ்சாலை தொழிலாளர்களின் செங்கொடி சங்கத்தின் போராட்டங்களில் பங்கேற்று பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தையே கலங்க வைத்த போர்க்குணம் மிக்க தொழிற்சங்க தலைவரானார். அன்று சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த ஒரே மத்திய தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரானார். ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் தலைமை வகித்தார். 1926 ஆம் ஆண்டு வரை காந்தியின் தாகத்தின் கிழ் இருந்தார். வர்ணாசிரம தர்மத்தை காந்தி நம்புவதாக வெளியிட்ட அறிக்கை ரணதிவேயை கொதிப்படைய செய்தது.

சமூகச் சீர்திருத்தம் மற்றும் சாதி எதிரப்பு கொண்டிருந்த அந்த இளைஞன் மிகுந்த குழப்பத்திற்குள் தள்ளப்பட்டான். சி.ஜி.ஷாவின் என்பவரின் மூலம் அரசியல் தெளிவு பெற்றார். பம்பாயில் மார்க்சிய நூல்களை ரகசியாமாக கற்றார். 1920 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்ப பெற்றது அவரை சில காலம் செயல்படாமல் முடக்கிவிட்டது. கம்யூனிஸ்ட் தொழிசங்க தலைவர்களுடனும், பம்பாய் பஞ்சாலை தொழிலாளிகளிடையே வேலை செய்வது ஆகிய அனைத்தும் சேர்ந்து இறுதியாக ரணதிவேயை மார்க்சியத்தை தழுவச் செய்தது. 1928 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். பி.டி.ஆர். தனது வாழ்நாள் முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்கள் விடுதலைக்கும் அர்ப்பணித்தார்.

1943ல் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கல்கத்தாவில் 1948ல் நடைபெற்ற இரண்டாம் மாநாட்டில் பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார். 1948-50 காலத்தில் அப்பொறுப்பில் இருந்தார்.

1948-51 காலத்தில் கட்சி எடுத்த நிலைப்பாடுகள் கட்சிக் குள்ளேயே விவாதித்து விமர்சிக்கப்பட்டு மாற்றப்பட்டது. பி.டி.ஆர். பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தனது தலைமையில் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகளின் மீதான விமர்சனத்தை ஒரு கம்யூனிஸ்டுக்கே உரிய தன்னடக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து கட்சிப் பணிகளைச் செய்து வந்தார்.

தோழர் ரணதிவேயை பற்றி ஸ்டாலின் செயலாற்றல் மிக்க திரைமையான கம்யூனிஸ்ட் என்று கூறியுள்ளார். 1954 ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவார்த்த போராட்டம் தீவிரமடைந்தது. கட்சிக்குள் இரு பிரிவுகள் உண்டாகின. ஒரு பிரிவிற்கு எஸ்.ஏ. டாங்கே, பி.சி.ஜோஷி, சி.ராஜேஷ்வர ராவ், ரனேன் சென், அச்சுத மேனன் மற்றும் எஸ்.வி.காட்டே மற்றும் ஒரு பிரிவிற்கு பி.டி.ரணதிவே, பி.சுந்தரையா, எம்.பசவபுன்னையா, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் மற்றும் சுர்ஜித் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவரான தோழர் பி.டி.ரணதிவே கட்சியின் சித்தாந்தப் பணிகளிலும் ஸ்தாபன பணிகளிலும் அரசியல் கொள்கைகள் உருவானதிலும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். 1970ல் சிஐடியு அமைப்பு துவக்கப்பட்டபோது அதன் அகில இந்திய தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தத்துவவாதி, பிரபலமான பேச்சளார், சிறந்த எழுத்தாளார் சிஐ.டி.யுவின் அகில இந்திய தலைவர், கட்சியின் மத்தியக்குழு வெளியிட்ட தத்துவார்த்த இதழின் ஆசிரியர் என்று அவர் ஏராளமான பங்களிப்புகள் செய்யதார். 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கத்தின் எதேச்சதிகார ஒடுக்குமுறையை எதிர்த்து போராட கட்சி மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு வழிகாட்டினார்.

தோழர் பி.டி.ரணதிவே, பெண்களை தொழிற்சங்க இயக்கத்தினுள் திரட்டிட இடையறாது போராடினார். உழைக்கும் பெண்கள் அமைப்புகள் உருவானதில் அவரது பங்கு தீர்மானகரமானது. போரட்டத்தின் பிரதான நிரோட்டத்தில் பெண்கள் சேரவில்லையென்றால் எந்த ஒரு தொழிலாளி வர்க்க இயக்கமோ, மக்கள் ஜனநாயக இயக்கமோ முன்னேற முடியாது வெற்றி பெற முடியாது என்று அவர் கூறுவதுண்டு.

சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டபோது அதுகுறித்த ஆழமான ஆய்வுகளை பி.டி.ரணதிவே எழுதினார். “உலகில் எவர் மார்க்சியப் பதாகையை கீழே போட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியப் பதாகையை உயர்த் திப்பிடிக்கும்” என உறுதியோடு எழுந்த அவரது குரல் கட்சித் தோழர்களிடையேயும் சோசலிச ஆதரவாளர்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ரணதிவே தன் வாழ்நாளை நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அரசியல் தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த அவரது கட்டுரைகள் மார்க்சிய இலக்கிய களஞ்சியத்தில் மதிப்பு மிக்கவையாக இன்றும் உள்ளன. விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவற்றில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். தவறுகளிடமிருந்து தன்னை திருத்திக் கொள்வார். அவருடைய விமர்சனங்கள் மிகவும் கூர்மையானதாக இருக்கும்.

“1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “தொழிலாளி வர்க்கம், சோசலிச பதாகையை உயர்த்திப் பிடித்து, அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறிச் செல்லும். இது நிச்சயம்” என்று சூளுரைத்தார். தொழிலாளி வர்க்கத்தினுள் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களை உணர்ந்து, அதற்கு ஏற்றாற்போல சங்கங்கள் தமது வேலை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வழிகாட்டினார். இந்திய முதலாளி வர்க்கம் தனது கொள்ளை லாபத்திற்காக தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றி வருவதை ஆரம்பத்திலேயே இனம் கண்டார். ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொழிற்சங்கம் தமது உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சங்கம் “நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே” உள்ள குறுகிய அமைப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்பதை ஆழமாக சுட்டிக் காட்டினார்.

இந்த வழிகாட்டுதல்தான் பின்னர் தொழிலில் உருவாகியுள்ள முறைசாராத் தன்மையை புரிந்து கொள்ளவும் அத் தொழிலாளர்களை திரட்டிடவும் வழிகாட்டுதலாக அமைந்தது எனில் மிகையல்ல பிற்போக்கு சக்திகள், தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை தவறான பாதையில் திரட்டுவதை தடுத்திட தொழிற்சங்கங்கள் அப்பகுதி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வழிகாட்டினார்.

அவர் 1989 ஆண்டு மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதுவே அவரது கடைசி உரையாகும்.

1990 ஏப்ரல் 6 ஆம் நாள் அவரது வாழ்கை பயணம் நிறைவுற்றது. தோழர் பி.டி.ரணதிவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 60 ஆண்டுகள் தலையாயப் பங்கை ஆற்றியுள்ளார். தோழர் பி.டி.ரணதிவே இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் என்று மட்டும் கூறினால் போதாது; அவரது தலைமுறையைச் சேர்ந்த மிகச்சிறந்த உலக கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் என்றே அவரை நான் கருதுகிறேன் என்று அவரது சக தோழரான எம்.பசவபுன்னையா புகழாரம் சூட்டினார்.

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...