தோழர் யமுனா முத்தையா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறை முன்னணி தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவருமான தோழர் கே.முத்தையாவின் துணைவியார் தோழர் யமுனா இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. அவரது தந்தையார் நடேசம் பிள்ளை திருச்சி பொன்மலையில் ரயில்வேயில் பணியாற்றியவர். அந்தக் குடும்பமே கம்யூனிஸ்ட் கட்சி குடும்பமாகும்.

யமுனாவிற்கு ஒரு மூத்த சகோதரியும், இரண்டு இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரிகள் நால்வருமே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்களையே மணந்தனர்.

1945-47 ஆம் ஆண்டுகளில் தோழர் யமுனா ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் நூலகராகப் பணியாற்றினார்.

தோழர் கே.முத்தையா – யமுனா திருமணம் நடந்த ஏழாவது மாதத்தில் 1948 மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர் கே.முத்தையாவும், ஏராளமான தோழர்களும் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1949 ஆம் ஆண்டில் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் கைதிகள் உண்ணாவிரதமிருந்த பொழுது, அவர்களின் மனைவியர் சென்னையில் அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் பங்கெடுத்த தோழர் யமுனா உள்ளிட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலையானதும் தோழர் யமுனாவும், அவரது மூத்த சகோதரி  ராஜமும் இளைய சகோதரி தோழர் அம்பாளும் (தோழர் பி.ராமமூர்த்தியின் துணைவியார்) விழுப்புரத்தில் இருந்த கட்சியின் தலைமறைவு மையத்திற்குச் சென்று முத்தையா விடுதலையாகும் வரை அங்கே தங்கி கட்சிப் பணிகளைச் செய்தனர்.

தோழர் கே.முத்தையா விடுதலையான பின், தோழர் யமுனா சென்னையில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். அவருக்கு மல்லிகா மற்றும் வனிதா என்ற இரண்டு புதல்விகளும், இளங்கோ என்ற புதல்வரும் உண்டு.

தோழர் கே.முத்தையா வருடக் கணக்கில் சிறையில் இருந்த சமயங்களில் தோழர் யமுனா மிகுந்த சிரமத்துடன் தனது புதல்விகளையும், புதல்வனையும் படிக்க வைத்து பராமரித்தார்.

தோழர் கே.முத்தையாவின் இயக்கப் பணிக்கு இறுதி வரை உறுதுணையாக இருந்தார். கடந்த பல வருடங்களாக மூத்த புதல்வி மல்லிகா ரவீந்திரனின் கவனிப்பில் இருந்து வந்தார். இறுதிக் காலம் வரை கம்யூனிச லட்சியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அஞ்சலி செலுத்துகிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் யமுனாவின் மறைவுச் செய்தி அறிந்ததும் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.வரதராஜன், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் தோழர் யமுனா முத்தையாவின் மருமகன் தோழர் ஏ.ரவீந்திரன் மகள் மல்லிகா ஆகியோரை தொடர்பு கொண்டு தங்கள் அஞ்சலியையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

தோழர் யமுனா முத்தையாவின் இறுதி நிகழ்ச்சி நாளை (திங்கள் கிழமை-16.12.2013) நண்பகல் நடைபெறும்.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply