நக்கீரன் அவதூறு‍ செய்திக்கு‍ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்

அன்புடையீர், வணக்கம்.    

8.10.2011 தேதிய நக்கீரன் இதழில் மிஸ்டு கால் என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தி போடப்பட்டுள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராஜன் கூறியதாக ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை ஆட்சேபித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அக்கட்சி தலைமைக்கு எழுதப்பட்ட கடிதம் எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவாகும். இதேபோல தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வதென எங்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுவிலும், மாநிலக்குழுவிலும் மேற்கொண்ட முடிவுகளும் ஏகமனதான முடிவுகள் தான்.

உண்மை இவ்வாறு இருக்கும் போது விஷமத்தனமாகவும், பத்திரிகை தர்மத்திற்கு விரோதமானதாகவும், உள்நோக்கத்தோடு இத்தகைய செய்திக் கருத்து நக்கீரனில் வெளியிடப்பட்டுள்ளது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்குடன் நக்கீரன் உண்மைக்கு மாறான விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் சிலமுறை இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டு எங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறோம்.

இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அவதூறான செய்திகளையும், கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிடுவதை நக்கீரன் நிறுத்திக் கொள்ளவில்லை. உண்மைகளுக்கும், பத்திரிகை நெறிமுறைகளுக்கும் எதிரான நக்கீரனின் இந்த நிலைபாடு தொடருமானால் இப்பிரச்சனையை பத்திரிகை கவுன்சில் (Press Council) உட்பட கொண்டு சென்று சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.   எங்களது இந்த மறுப்புக் கடிதத்தை அடுத்து உடனடியாக வெளிவரும் நக்கீரன் இதழில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.   

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply