நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையான ஊழலற்ற நிர்வாகம் அமைய வாக்களிப்பீர்!!

தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு, வணக்கம்!

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பலகோடி வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய ஜனநாயகத்தை காத்து நிற்கக்கூடிய வேர்களாக விளங்குபவை உள்ளாட்சி அமைப்புகளாகும்.

உள்ளாட்சி அமைப்புக்கு தேர்வுசெய்யப்படுவோர் ஊழலற்றவர்களாக -நேர்மையானவர்களாக செயல்படும்போதுதான் மக்களின் அடிப்படை வசதிகள் முறைகேடின்றி நிறைவேற்றப்படும். மக்கள் நலத் திட்டங்கள் செம்மையாக செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு, பஞ்சாயத்துராஜ் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்குவங்க- கேரள- திரிபுரா மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடத்தி, உள்ளாட்சி ஜனநாயகத்திற்கு உயிரூட்டின. மாநில அரசின் திட்டப்பணிகளில், திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில், 50 சதவீதத்திற்கு மேல் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதிக அதிகாரமும், நிதியாதாரமும் வழங்கப்பட்டன.

1992-ஆம் ஆண்டு, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்று உரிய காலத்தில் மூன்று முறை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு உரிய அதிகாரத்தையோ, நிதியாதாரத்தையோ வழங்க தயாராக இல்லை. மாநில சுயாட்சி கோரும் இந்த கட்சிகள், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீரழித்தன. அரசியலில், இந்த இரு கட்சிகளும், இருதுருவங்களாக காட்சியளித்தாலும், உள்ளாட்சி பணிகளை நிறைவேற்றுவதில், கமிஷன் வாங்குவதிலும், முறைகேடு செய்வதிலும் கைகோர்த்து நின்றன. தேர்தலில், அராஜகம்- வன்முறையை கட்டவிழ்த்து விடுவதில், இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல; என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்த பின்னணியில், ஊழலற்ற- நேர்மையான- வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகம் என்ற முழக்கத்தை முன்வைத்து, தேமுதிகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது.

முதல்வர் பதவி துவங்கி சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிவரை, மக்கள் பணி செய்ய கிடைக்கும் வாய்ப்பை, அலங்காரப் பதவியாக கருதாமல், மக்களுக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பாகக் கருதுபவர்கள் மார்க்சிஸ்டுகள்.

மக்களுக்கான பணியை தூய்மையாக மேற்கொண்டதால், தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் மதுரை மாமன்ற உறுப்பினர் தியாகி லீலாவதியும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் தோழர். ரத்தினசாமியும் ஆவர்.

தேர்தல் என்றாலே, ‘முதல் போட்டு வட்டியோடு சம்பாதிக்கிற தொழில்’ என்றாகிவிட்ட நிலையில், ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை நகர்மன்றங்கள் துவங்கி உள்ளாட்சி மன்றங்கள் வரை நடத்திக் காட்டிய பெருமை மார்க்சிஸ்டுகளுக்கு உண்டு.

இதைப் போலவே உள்ளாட்சி நிர்வாகத்தை, தேமுதிக நேர்மையாக நடத்திடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், சிண்டிகேட் அமைத்து கமிஷன் வாங்காத- ஒப்பந்தங்களில் கட்டிங் கேட்காத- உள்ளாட்சி நிர்வாகம் அமைய தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவது அவசியமாகும்.

குடிநீர், சுகாதாரம், சாலைவசதி போன்ற அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த இந்த அணி வெற்றிபெறுவது அவசியமாகும்.

உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், இந்த இருகட்சிகள் போட்டியிடாத இடங்களில் சிபிஎம், தேமுதிக ஆதரிக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply