நல்லூர் தலித் மக்கள் மீது சாதிய சக்திகளின் கொடூரத் தாக்குதல் தமிழக அரசு தலையிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்

29.08.2017

நல்லூர் தலித் மக்கள் மீது சாதிய சக்திகளின் கொடூரத் தாக்குதல்

தமிழக அரசு தலையிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான தெற்கு காலனியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 25 விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்று மாலையில் இப்பகுதி மக்கள் ஒரு விநாயகர் சிலையை அமைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தில் வாழும் சாதி இந்துக் குடும்பங்களைச் சார்ந்த சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்த தலித் மக்களை இடித்துக் கொண்டு சென்றனர். அப்பகுதியில் இருந்த பெரியவர்கள் அவ்வாறு இடித்துக் கொண்டு சென்றவர்களை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அன்று இரவு சுமார் 10 மணியளவில் சாதி இந்து குடியிருப்பு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்களை கொண்ட கும்பல், தெற்கு காலனி தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்து மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பல குளிர்சாதனப் பெட்டிகள், பீரோக்கள் மற்றும் விலையுர்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ஒரு வீட்டில் திருமணத்திற்காக சேமித்து வiத்திருந்த தங்க நகைகள், ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். பல குடிசைகளுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சில வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வானங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.  தலித் மக்கள் வழிபட்ட பிள்ளையார் சிலையையும் அடித்து நொறுக்கி சிதைத்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதல் சம்பவம் அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி/ மக்கள் மன்றம் போன்ற அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நல்லூரில் தலித் மக்கள் மீதான இக்கொடூரத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி வழங்க வேண்டிய நிவாரணங்களை தாமதமின்றி வழங்கிடுமாறும், தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்து உறுதியான குரல் எழுப்புமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலளார்

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...