நவீனா குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் உதவித் தொகை

ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட விழுப்புரம் நவீனா குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் உதவித் தொகை வழங்கிட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

விழுப்புரம்,  வி.பாளையத்தைச் சேர்ந்த அங்கப்பன் – நாகம்மாள் இவர்களின் மூத்த மகள் நவீனாவை(17), அப்பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்த இந்திரா நகரைச் சேர்ந்த செந்தில் (32) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். செந்திலின் காதல் தொல்லையால் சிரமத்துக்கு உள்ளான நவீனா தனது  பள்ளிப்படிப்பை நிறுத்த நேர்ந்துள்ளது.

இந்நிலையில் நவீனாவை காதலித்த செந்தில் கடந்த ஜூலை 29 அன்று நவீனாவின் வீட்டிற்குள் நுழைந்து தன்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு நவீனாவை நெருப்போடு கட்டிப்பிடித்துள்ளார். நெருப்பில் கருகிய நிலையில் செந்தில் இறந்து விட, நவீனா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 2 அன்று உயிரிழந்தார்.

ஒருதலைக்காதல் நிர்ப்பந்தத்தால் பள்ளிக்கல்வியை இழந்து, தற்போது தனது உயிரையும் இழந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் கொடிய நிகழ்வாகும். இந்த ஆணாதிக்க ஒருதலைக்காதல் உயிரிழப்பு சம்பவம் கடும் கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரியது.

ஒருதலைக்காதல் சம்பவ மரணங்களும், படுகொலைகளும் சமீப காலமாக அதிகரித்து வருவது தமிழகத்தையே கவலை கொள்ளச் செய்துள்ளது. இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக மக்கள் முன்பு உள்ளது. இதில் கூடுதல் பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. எனவே, இதுபோன்ற துயர நிகழ்வுகள் தொடராது இருக்க தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

நவீனாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. வறுமை நிலையில் உள்ள நவீனாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...