நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அயராத உழைப்பாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக நடத்திய வீரியமிக்க போராட்டங்களாலும், கிளைச் செயலாளர் துவங்கி கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான பல வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்கள் அவர் மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற வறட்சி நிவாரணம் கோரி நடைபெற்ற தொடர் முற்றுகைப் போராட்டம் குறிப்பிடத்தக்கதாகும்.

செட்டிபுலம், விழுந்தமாவடி, மாத்தூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் தீர்வு ஏற்படுகிற வரை முன்னின்று நடத்திய போராளி தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தில் சுமார் 15 ஆண்டு காலம் வட்டச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும், மாநில நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்ட காலத்தில் கூலி உயர்வுக்கான போராட்டம், இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம், வீட்டுமனைப் பட்டா, நிலவுரிமைக்கான பல்வேறு போராட்டங்கள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கத்தக்கவையாகும். இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகவும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பழுக்கற்ற முறையில் நேர்மையாக பணியாற்றியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகள், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், தற்போது மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளராக செயல்பட்டு வந்த  தோழர் ஏ.வி. முருகையன் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். அந்த செயல் வீரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த அஞ்சலியையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார், மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கும், நாகை மாவட்ட தோழர்களுக்கும் கட்சியின் மாநிலக்கு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...