#ManMadeDisaster என்ற ஹேஷ்டேக் உடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் பற்றி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய பதிவின் 10 அம்சங்கள்:
- மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளின் விளைவை அலசுவதற்கு இந்த ஒரு மாதம் என்பது சரியான கால அளவாக இருக்கும்.
- ஊழல், பயங்கரவாதம், கள்ளப் பணம் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதுதான் இலக்குகள் என்று மோடி தன் அறிவிப்பில் குறிப்பிட்டார். இந்த இலக்குகள் அனைத்துமே தோல்வி என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது.
- நவம்பர் 8-ல் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிட்ட அறிவிப்பில் தவறவிட்ட ‘டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை’ என்ற அம்சத்துக்கு இப்போது மாறியிருக்கிறார் மோடி.
- இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை அடியோடு வெளியேற்றினால் ஒழிய, நம் போன்ற நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லை.
- துக்ளக் தர்பார் காரணமாக, ஒரு மாத காலமாக அடிமட்ட அளவில் பொருளாதாரம் முடங்கி, மக்கள் கடும் சோதனைக்கு ஆளாகி வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
- கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் கூடுதலாக வரியை செலுத்தி தங்கள் கள்ளப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ளும் ‘வாய்ப்பைப்’ பெறுகின்றனர்.
- யாருக்காக மோடி பேசுவதாக சொல்கிறாரோ, அந்த ஏழை மக்கள்தான் நாளுக்கு நாள் கடும் துயரத்துக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
- கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வராக் கடன்கள் எனக் காண்பிக்காத வகையில் ரூ.1.12 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
- இதே காலகட்டத்தில், இந்தியாவின் 1 சதவீத எண்ணிக்கையில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 49 ரூபாயிலிருந்து 58.4 ரூபாயாக உயருகிறது. இதுவே, பிரதமருக்கு யாருக்காக செயல்படுகிறார் என்பதை தெளிவாகக் காட்டும்.
- பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்காக, பண மதிப்பு நீக்கம் எனும் பேரிடரால் ஏழை – நடுத்தர மக்களை வதைத்துள்ளது மோடி அரசு.