நாடுமுழுதும் உள்ள ஏழைகளைக் காப்பாற்றிட இருப்பிலுள்ள தானியங்களை விநியோகித்திட மத்திய அரசு முன்வர வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

நாடு, மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுத்துநிறுத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாலும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்கனவே நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் விளிம்புநிலைமக்களைக் கடுமையாக பாதித்திருப்பதாலும், மத்திய அரசாங்கம் இருப்பிலுள்ள தானியங்களை பொது விநியோக முறையில் ஏழைகளுக்கு விநியோகம் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில், சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகளிலும் வேலைகள் ஸ்தம்பித்திருப்பதால், அவற்றில் தினக்கூலியாக இருந்துவந்த முறைசாராத் தொழிலாளர்கள் ஊதியமின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதேபோன்று வீதிகளில் வியாபாரம் செய்வோர், சிறிய கடைக்காரர்கள், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இவை இப்பகுதிமக்களின் மத்தியில் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகளையும், போதிய சத்துணவு உட்கொள்ளாத நிலைமையையும் அவற்றின்காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி இவர்கள் மத்தியில் குறையக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உணவு தானிய ஒதுக்கீடுகளை அதிகரித்திட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யும் தானியங்களை இலவசமாக அளித்திட வேண்டும். அவற்றை மாநில அரசுகள் தேவைப்படும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு தற்போது 7.5 கோடி டன்கள் (பிப்ரவரி 1 கணக்கீட்டின்படி) இருப்பு வைத்திருக்கிறது. இப்போது இவற்றை கிடங்குகளில் உள்ள எலிகள்தான் தின்றுகொண்டிருக்கின்றன.
இவற்றை வெளிக்கொணர்ந்து இலவசமாக வழங்கி, ஏழை மக்களைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வராவிட்டால், அவர்கள் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு மிகவும் எளிதாக ஆளாகிவிடுவார்கள்.
மத்திய அரசு, நாடு முழுதும் உள்ள ஏழை மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தன்னுடைய கிடங்குகளிலிருந்து உணவு தான்யங்களை விடுவித்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...