நாளைய விடியலை நம்பிக்கையோடு வரவேற்போம் சிபிஐ(எம்) புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

2017 ஆம் ஆண்டு மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கான மகத்தான போராட்டங்கள் மலர்கிற ஆண்டாக அமையட்டும். ஒவ்வொரு ஆண்டும் அதனதன் அளவில் பல்வேறு சுவடுகளைப் பதிக்கும் ஆண்டாகவே வந்து போகிறது.

2016 ஆம் ஆண்டிலும் உலகளவிலும், தேசிய அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி தாண்டவமாடுகிறது. இரண்டு பருவமழைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதே குடிநீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் வராததாலும், மழை இல்லாததாலும் காவிரி பாசனப்பகுதி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசிற்கு உள்ளது. மத்திய அரசும் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமானவரிச் சோதனைகள் போன்றவை ஊழல் எந்தளவிற்கு அனைத்து நிலைகளிலும் வேரோடிப்போயுள்ளது என்பதையே காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக தொடர்போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளதோடு லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க வலியுறுத்த வேண்டியுள்ளது.  அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டுச் சேர்ந்து மாநிலத்தின் இயற்கை வளத்தை சூறையாடுவது தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும்.

தமிழக மக்கள் நீண்ட நெடுங்காலமாக மதச்சார்பின்மை, பகுத்தறிவு பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து மதவெறி சக்திகளை புறக்கணித்தே வந்துள்ளனர். ஆனால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்ற நப்பாசையோடு பாஜக பரிவாரம் பல்வேறு மறைமுக, நேரடி சதிகளில் ஈடுபடுகிறது. இதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது உறுதி.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு பழமைவாத சக்திகளை பின்னுக்குத் தள்ளி, முற்போக்கு, மாணவர் இயக்கங்கள் முன்னுக்கு வருவது நல்ல அறிகுறியாகும். மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புக்கள் கருத்துத் தளத்திலும், போராட்டக் களத்திலும் இணைந்து நிற்பது அவசியமாகிறது.

கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி என்று சொல்லத்தக்க அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது.

கறுப்புப்பண, கள்ளப்பண, ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை கார்ப்பரேட்டுகள், பெருமுதலாளிகள். கறுப்புப்பண பேர்வழிகள் தவிர அனைத்துப்பகுதி மக்களும் கடும் துன்ப துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மோடி அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மக்களை மேலும், மேலும் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்குவயதாகவே அமைந்துள்ளன. அதே நேரத்தில் சிறு வணிகத்தை ஒழித்துவிட்டு பெரு முதலாளிகள் வசம் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் ஒப்படைக்கும் சூழ்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிவருகிறது.

பொய்யை மூலதனமாக்கி மக்களை ஏமாற்றிவரும் மோடி அரசிற்கு எதிராக வலுமிக்க, ஒன்றுபட்ட போராட்டங்களை இந்தாண்டில் நாடு காணப்போவது உறுதி.

உலகில் மகத்தானது மனித சக்தியே. வரலாற்றுச் சக்கரத்தை மனித உழைப்பே வழிநடத்தி வந்திருக்கிறது. உலகில் பாட்டாளி வர்க்கம் முதன் முதலாக சோவியத் நாட்டில் ஆட்சி அமைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உழைக்கும் மக்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த புரட்சி அது. அந்த புரட்சி உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் புத்தாண்டை வரவேற்போம். நம்பிக்கையோடு நாளைய விடியலை எதிர்கொள்வோம் என்று இந்த புத்தாண்டு நாளில் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...