நிதி நெருக்கடியில் அரசு – வறட்சியின் பிடியில் தமிழகம் – தீர்வு ஏதும் சொல்லாத தமிழக பட்ஜெட்

கடந்த சில வருடங்களாக தமிழக அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளாலும், மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையினாலும் தமிழக அரசின் முன்யோசனையற்ற நிதிநிர்வாகத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை தமிழக அரசின் 2017-18க்கான நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது.  இதுவரை மூடிவைத்திருந்து சிகிச்சை செய்யப்படாத புண்ணைப் போல தமிழகத்தின் நிதிநிலை காட்சியளிக்கிறது.

தமிழக அரசின்  கடந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ. 2,52,431 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலைநிலை அறிக்கையில் அது ரூ. 3,16,366 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று வருவாய் பற்றாக்குறை ரூ 15,931  கோடி எனவும், நிதிப்பற்றாக்குறை ரூ. 41,977 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.  இதனால் தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதோடு, அதன் காரணமாக பொதுச்செலவினங்களில் மிகப்பெரிய கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு. வணிக வரி வரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய அரசின் மாநில அரசிற்கான வரி பங்கீடு 2016-17ம் ஆண்டில் ரூ. 23 ஆயிரம் கோடியாக குறைந்திருந்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் நிதிநிலை இன்னும் கடுமையாக பாதிக்கப்படும்.

வர்தா புயல், வறட்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டால் இந்த ஆண்டிற்கான நிதித்தேவை மிக அதிகமாக இருக்கும் என்கிற நிலையில் மத்திய அரசு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலைமை தொடருகிறது. இது தவிர மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மாநில அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ. 2730 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நேரடி வரி வருவாயை அதிகப்படுத்துவதற்கு பதிலாக மாநிலத்தில் பொதுவிநியோக முறை சீரழிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக பொதுவிநியோக முறையில் வழங்கப்படும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்திலிருந்து தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை வழங்கப்படுகிறது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் பொதுவிநியோகத் திட்டத்திற்கு ரூ. 5300 கோடி மானியம் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 6 மாத காலத்தில் சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவிநியோகத் திட்டத்திலும் வழங்கப்படும் பொருட்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ.5500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்திருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் இந்த ஒதுக்கீடு எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. கூடுதலான ஒதுக்கீடு என்ற தோற்றத்தைக் காட்டி நடைமுறையில் பொதுவிநியோகமுறையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குறைத்து வழங்குவதற்கான நிலையே ஏற்படும்.

விவசாயத்துறை

விவசாயத்தில் இந்த ஆண்டு ஒருகோடி டன் உணவு தானியம் என்கிற உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 1.47 கோடி டன் இலக்கு என்பதோடு ஒப்பீட்டால் இது மூன்றில் ஒரு பங்கு குறைவாகும். வறட்சி பாதித்த இந்த ஆண்டின் இலக்கை விட எதிர்வரும் ஆண்டில் இலக்கு குறைக்கப்பட்டிருப்பது விவசாயத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. கடந்த ஆண்டு பயிர்க்கடன் மற்றும் அதற்கான வட்டி தள்ளுபடி என்பதை அரசு அறிவித்திருந்தது. மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி பாதித்துள்ள நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து இந்த அரசின் அக்கறையில்லாத போக்கையே வெளிப்படுத்துகிறது. இதேபோன்று வறட்சியின் காரணமாக கால்நடைகள் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைத்துறைக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை

போக்குவரத்துத்துறைக்கு 2192 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டீசல் மானியம், மாணவர்கள் – மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை, பங்கு மூலதனம் ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிகக் குறைந்த ஒதுக்கீடே மிஞ்சும். ஆனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் ரூ. 1100 கோடியும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 250 கோடிக்கு அதிகமான தொகையும், தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து போக்குவரத்துக் கழகங்கள் எடுத்து செலவு செய்த தொகை ரூ. 3000 கோடியும் இது தவிர தொழிலாளர்களின் பல்வேறு கணக்குகளில் கொடுக்கப்பட வேண்டிய தொகையுமாக சேர்த்து 5000 கோடி ரூபாய்க்கு மேல் அரசாங்கம் தர வேண்டியுள்ளது. இவற்றைப் பற்றியெல்லாம் இந்த நிதிநிலை அறிக்கையில் எந்தவிதமானஅறிவிப்புகளும் இல்லாதது அந்த துறையை அரசு கண்டுகொள்ளவில்லை அல்லது இப்போது இருக்கிற நிலையிலேயே நீடிக்க வேண்டுமென விட்டுவிட்டதாக தெரிகிறது.

தொழில்துறை

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம் குறித்து தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையில் பேசப்பட்டு வந்தாலும் இதுவரையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப் போல் அறிவிப்பைத் தவிர உருப்படியான திட்டங்கள் எதுவும் அரசு அறிவிக்கவில்லை. இதேபோன்று செல்லா நோட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான தொகை சதவிகித அளவில் 53 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும் சிறு-குறு தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிடும் போது 532 கோடி ரூபாய் என்பது எந்த வகையிலும் அந்த தொழிலை மேம்படுத்துவதற்கோ, பாதுகாப்பதற்கோ போதுமானதாக இருக்காது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

பருவநிலை மாற்றம், குடிதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர், காற்று வெளி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளின் காரணமாக நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலான மருத்துவமனைகளோ, மருத்துவ கல்லூரிகளோ உருவாக்குவதற்கான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

தொழிலாளர் நலத்துறை

சுமார் 68.52 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கடந்த ஆண்டு ரூ. 115 கோடி அளவிற்கான நல உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. வாரியத்தில் உறுப்பினர்களாகி நல உதவித் தொகை கோரி மனுசெய்த 2,70,000 பேருக்கு இதுவரை உதவித் தொகை வழங்கப்படவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையும் போதாது, நடைமுறையில் உதவித்தொகை முறையாக வழங்கப்படுவதுமில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு உரிய ஒதுக்கீடுகள் செய்யப்படாத நிலை உள்ளது.

வேலைவாய்ப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அதற்கென 100 கோடி, அந்நிய முதலீடு ஆறாய் பெருகி வரும், வேலைவாய்ப்புக்கள் காய்த்து தொங்கும் என்று கடந்த கால வாய்ச்சவடால்கள் இந்த அறிக்கையில் இல்லை. 80 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைகோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உருப்படியான திட்டம் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையில் சில பள்ளிகளை தரம் உயர்த்துவதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து பள்ளிகள் மூடப்படுவதை நிர்வாகம் மூலமாகவோ, நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவோ தடுத்திட, நடவடிக்கை எடுத்திட எந்த திட்டமும் அறிக்கையில் இல்லை.

அரசு ஊழியர்ஆசிரியர்

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்திட ஒரு குழு அமைப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் இதுபற்றி ஏதும் சொல்லப்படவில்லை.

மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கோ குறைந்தபட்சம் இந்த ஆண்டு தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கோ உகந்த நிலையில் இல்லை என்பதோடு, மக்களின் ஒவ்வொரு பகுதியினர் விவசாயிகள், தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், பொதுவிநியோகத் திட்டப் பயனாளிகள் உட்பட எவருக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது மட்டுமல்ல, நிவாரணம் கூட அளிக்காத மிக மோசமான நிதிநிலை அறிக்கையாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...