நிதி வழங்காத மத்திய அரசையும் டாஸ்மாக்கைத் திறக்கும் மாநில அரசையும் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில்

கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம்!

அனைவரும் பங்கேற்க சிபிஐ(எம்) வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது ஊரங்கால் ஏழை – எளிய மக்கள், அன்றாடக் கூலி உழைப்பாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மீனவர்கள், நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை மாநில அதிமுக அரசு நிராகரித்து வருகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நாளை மதுக்கடைகள் திறந்திட உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கான  நிதி உதவியினை ஏற்க மறுத்து வருகிறது. உலகில் பல நாடுகளில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் 10ரூ முதல் 20ரூ வரை நிதி ஒதுக்கி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய பாஜக அரசு வெறும் 0.7 சதவீதத்தை மட்டும் ஒதுக்கி இந்திய மக்களை நிராதரவாக விட்டுவிட்டு உள்ளது.

இத்தகைய மத்திய – மாநில அரசுகளை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாளை 7.5.2020 அன்று அவரவர்கள் வீட்டிலேயும், கட்சி அலுவலகங்களிலும் 5 பேருக்கு மிகாமல் கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் மற்றும் அனைத்துப் பகுதி பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு முன்பாகவும், ஆங்காங்கு உள்ள கட்சி அலுவலகங்களுக்கு முன்பாகவும் 5 பேருக்கு  மிகாமல் கருப்பு பட்டை அணிந்து காலை 10 மணிக்கு 15 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். நாளை ஒருநாள் முழுவதும் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...