நித்யானந்தா ஆசிரமத்தில் உயர்மட்ட விசாரணை நடத்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன்,  பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா என்கிற பல குற்ற வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டுள்ள சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நபரும், அவரது கூட்டத்தினரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பவளக்குன்றில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன் மற்றும் தமுஎகச தலைவர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீது சமூக வலைதளத்தில் மிகவும் தரம் தாழ்ந்த பாலியல் வக்கிரத்துடன் கூடிய தாக்குதலை தொடுத்தது. நித்தியானந்தாவின் அடியாட்களை ஏவி தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டது. இது குறித்து கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்படடது. நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் காவல்துறை இயக்குநரிடமும் இது குறித்து முறையீடு செய்யப்பட்டது. இன்று வரையிலும் இவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.

இந்நிலையில் சமீப காலமாக தோழர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீதும் அவர்களது குடும்பத்தினரை இணைத்தும் வக்கிரமான வீடியோக்களை வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களில் பேசுபவர்கள் 18 வயது கூட நிரம்பாத இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தகைய குழந்தைகள் பொதுவெளியில் காதால் கேட்க கூசுகிற வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. அந்த காணொளிகள் பாலியல் வக்கிரத்தோடு அமைந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக நித்தியானந்தா கும்பல் தியானத்திற்கு அழைத்து வந்த ஆண் – பெண் குழந்தைகளை பெற்றோர்களுடன் அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

எனவே காவல்துறை சம்பந்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது.

மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது சோதனை நடத்த வேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பு குறித்தும், அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்ட சூழல் குறித்தும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நித்தியானந்தா கும்பல் கை வசம் உள்ள நிலங்களின் உரிமை குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...