நியாயப்படுத்த முடியாத தவறை நியாயப்படுத்த தலைமை செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார் சிபிஐ(எம்) விமர்சனம்

சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்குசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் உரிய முறையில் உரிய காலத்தில் திறந்து விடப்படாததும், திடீரென மிக அதிகமான நீர் திறந்து விடப்பட்டதும்தான் காரணம் என்று பல்வேறு பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பியிருந்தன. இதற்கு பதில் அளிப்பதற்காக 13 பக்க அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இத்தகைய ஒரு பிரச்சனையில் இதுகாறும் முதலமைச்சர் மட்டுமே பதில் சொல்லுவார். இம்முறை, நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதற்காக, தான் அல்லாத ஒருவரின் மூலம் பதில் சொல்ல பணித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிரிழப்பு, பேரழிவு, பெருநஷ்டம், நீங்கா பயம் ஆகியவற்றுக்கு காரணமான, செய்த அல்லது செய்யத்தவறிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார். தலைமை செயலாளர் 13 பக்கத்தில் பல்வேறு தரப்பினரை ஆதாரமாகக் கொண்டு அரசின் நிலைபாட்டை நியாயப்படுத்த ஒருவாரம் கழித்து முயற்சிக்கிறார். நடைபெற்ற பெருந்துயரத்தின் பாதிப்பை இனி குறைத்து விட முடியாது என்றாலும் விமர்சனத்தால் ஏற்பட்டுள்ள மக்களின் கோபத்தையாவது ஓரளவு குறைக்கலாம் என்கிற முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

தலைமை செயலாளரின் அறிக்கையில் ஓரளவு உண்மையும், சில புள்ளி விபரங்களும் பல உண்மைக்கு மாறான தர்க்கங்களும் முன்வைக்கப்பட்டிருப்பதே நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

  1. கனமழை பொழியும் என்பதை பி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள் சொன்ன பிறகும் அதை கவனத்தில் எடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஏன் என்பதைப் பற்றி அவர் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை. இத்தனை உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் ஐளடிடயவநன என்றால் ஒன்று அல்லது இரண்டு இடம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். மிகக்கனமழை 12.4 செ.மீ முதல் 24.4 செ.மீ வரை என்று குறிப்பிட்டிருக்கிறார். 50 செ.மீ மழை என்பதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் 1-12-2015 காலை 8.30 மணிக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகக்கடுமையான கனமழை (Extremely Heavy Rain) பெய்யும் என்று எச்சரித்ததையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். இது முரண்பாடாக உள்ளது. ஐரோப்பிய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 1-5 தேதிகளில் மிகக்கடுமையான மழை பொழிவு இருக்கும் என்று கூறியிருந்தது. இதன் பொருள் நிச்சயம் 24.4 செ.மீ விட அதிகம். இதை கணக்கில் எடுக்காதது ஏன் என்று விளக்கவில்லை.
  2. பொதுவாக ஒவ்வொரு வடிகால் அமைப்பின் விதிகள் தளத்தில் உள்ள அதிகாரிகளுக்கு திறக்கவும், மூடவும் அனுமதி அளித்திருக்கின்றன. ஆனால், அந்த அனுமதி கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி மையப்படுவது இந்த ஆட்சியின் அவக்கேடான அம்சமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.எழுத்தில் இருப்பதை சொல்லி நடைமுறையில் ஏற்பட்ட கிரிமினல் நெக்லிஜன்சை மறைக்க முயல்கிறார்.
  3. தவறிழைத்தவர்கள் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் இல்லை, அதேசமயம் கோப்பு எந்த இடத்தில் தேங்கி இருந்ததோ அதைப்பற்றி சொல்ல முடியாது, எனவே, அப்படி ஒரு கோப்பே அனுமதிக்காக காத்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
  4. அறிக்கையின் ஆறாவது பக்கத்தில் 1-12-2015 10 மணிக்கே 10,000 கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டதாக கூறும்போது சென்னை மாவட்ட ஆட்சியர் 11.20 மணிக்கு 7,500 கனஅடி தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டதாக கூறியிருக்கிறார். உண்மையில் நண்பகல் 12 மணியின் போது 12,000 கனஅடி திறந்து விடப்பட்டிருக்கிறது. ஒருவாரம் கழித்து வரும் அறிக்கையில் இந்த பிழைகள் இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் கவனமின்மை என்பதைத் தாண்டி உண்மையை மறைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி என்பதை தவிர வேறென்ன?
  5. பி.பி.சியும், இந்திய வானிலை ஆராயச்சி மையமும் 1-ம் தேதி முதல் கடும் மழை பெய்யும் என்று அறிவித்த பிறகும், அதற்கு முந்தைய நாள் வரை ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவுக்கு சமமாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோதான் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இது பற்றி உரிய விளக்கததை அவர் எந்த இடத்திலும் அளிக்கவில்லை.
  6. வெள்ள நீர் வந்து கொண்டிருந்த போது, பல பகுதிகளில் மின்சாரமில்லை. பல பகுதிகளில் கனமழை பெய்ததால் தண்டோரா போடவும், டி.வி.க்கள் மூலம் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் குறிப்பாக எஸ்எம்எஸ் மூலம் மக்களை எச்சிரிக்கை செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோரக்காவல்படை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தப்பணியில ஈடுபடுத்தவில்லை என்பதும் அவரவர்கள் தங்களின் சுயேச்சையான முடிவிலிருந்தே செயலாற்றினார்கள் என்பதும், சிலபகுதிகளில் திடீரென வெள்ளம் வந்ததால் ஹெலிகாப்டர் தளம் இயங்க முடியாததையும் பத்திரிகைகள் பதிவு செய்திருக்கின்றன. எனவே எடுக்கப்படாத முடிவு, பின்னர் பதட்டத்தில் திடீரென திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாத வகையில் ஏற்கனவே செயலற்றிருந்த நிர்வாகம் சீர்குலைந்து போனது.
  7. ஒருவேளை 1-12-2005-க்கு முன்னதாக 60 சதவிகித கொள்ளளவில் ஏரியை வைத்திருந்தாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்திருக்காது என்றும், வேண்டுமானால், கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதை 2 மணி நேரம் தாமதத்திருப்பதை தவிர வேறு எதுவும் நடந்திருக்காது என்றும் தலைமை செயலாளர் குறிப்பிடுகிறார். மிகப்பரிதாபமான தற்காப்பு நிலைபாடு இது என்பதை தெரிந்தும் வேறு வழியின்றி பதிவு செய்திருக்கிறார். 2 மணிநேரம் என்பது பேரிடர் மீட்புக்கான 120 பொன்னான நிமிடங்கள் என்பதை அவர் புறக்கணிக்கிறார். சில நொடிகளில் பல உயிர்கள் பல பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். வெளியேற்றுவதற்கும் மீட்பு நடவடிக்கை குழுக்களை ஒருங்கிணைப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். எல்லாவற்றையும் விட 75 சதவிகிதத்தில் நீர்மட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் உடனடியாக அதிக அளவு தண்ணீரை திறந்து விடுவதற்கு பதிலாக, 10,000-லிருந்து 15,000 கனஅடியாக திறந்து விட்டிருக்க முடியும். ஒருபோதும் 29000 கன அடி திறந்து விட்டு சென்னையை மூழ்கடித்த நிலை ஏற்பட்டிருக்காது. இது எல்லாவற்றையும் தாண்டி ஒன்றாம் தேதி காலை 1 மணி முதலே 10,000 கன அடி தண்ணீர் என்கிற விதத்தில் திறந்து விட்டிருந்தாலே இந்தப் பேரழிவு நிகழ்ந்திருக்காது.
  8. எனவே 10-12-2015 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த Criminal Negligence தவறிழைத்தோர் மீது நடவடிக்கை அதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை என்கிற கோரிக்கையை இன்னும் தீவிரமாக வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...