நிலஅபகரிப்பு கும்பலின் கொலை வெறித் தாக்குதல் கண்டுகொள்ளாத காவல்துறை – நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தெய்வச்செயல்புரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 915 ஏக்கர் நிலத்தை நில அபகரிப்பு கும்பல் மோசடி ஆவணங்களை தயாரித்து 2008 முதல் அபகரிப்பதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறது. அக்கிராம மக்களும், விவசாயிகளும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 2009ம் ஆண்டு முதல் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நிலஅபகரிப்பு கும்பல் விவசாயிகள் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீதும் தொடர்ச்சியாக கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டே வருகின்றனர். நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவது, வேலிகளை உடைப்பது, எதிர்த்து கேட்போரை ஆயுதங்களால் தாக்குவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும், நில அபகரிப்பு கும்பல் மீதோ, வன்முறையில் ஈடுபட்ட நில அபகரிப்பு கும்பலின் அடியாட்களான தொழில்முறை ரவுடிகள் மீதோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை சுமார் 5.45 மணியளவில் விவசாயிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளருமான க.பெருமாள் என்பவரை நிலஅபகரிப்பு கும்பலின் அடியாட்கள் 5 பேர் கொலை செய்யும் நோக்கத்தோடு மிளகாய் பொடியை தூவி தாக்கியிருக்கிறார்கள். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 7 தையல் போடப்பட்டுள்ளது, இரண்டு கைகளிலும் முழுங்கையில் அடித்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயங்களுடன் பெருமாள் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை காவல்நிலையம் நில அபகரிப்பு கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது தொடர்வதாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட புகார்களின் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமீபத்தில் 23.9.2015 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டக்குழு செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் தெய்வச் செயல்புரத்தில் நடைபெற்ற போது, மாத்தையன் மற்றும் பெருமாள் என்கிற இரு தொழில்முறை ரவுடிகள் மேடையில் ஏறி கனகராஜை வெட்டிவிடுவோம் என்று கொலைமிரட்டல் விடுத்தனர். மேடை அருகிலிருந்த புதுக்கோட்டை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து அன்றிரவே புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

24.9.2015 அன்று பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இப்போது தாக்கப்பட்டுள்ள தோழர் பெருமாளை, மாத்தையனின் தாயார் கடுமையாக மிரட்டியுள்ளார். இது குறித்தும் அதே காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக 25.9.2015 அன்று புதுக்கோட்டை காவல்நிலையம் சென்றிருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் க. கனகராஜ், கே.எஸ். அர்ச்சுணன், கே.பி. பெருமாள், மாரியப்பன் ஆகியோரை புதுக்கோட்டை செல்வம் தலைமையிலான அடியாள் கும்பல் காவல்நிலையத்திலேயே ‘சங்கை அறுத்துவிடுவோம்’ என்று மிரட்டியது. இதுகுறித்தும் காவல்நிலையத்தில் அப்போதே புகார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது. இவை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 1.10.2015 அன்று கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து தொழில்முறை ரவுடிகளை நில அபகரிப்பு கும்பல் பயன்படுத்தி வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

ஆயினும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இன்று பெருமாளை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

எனவே, மாவட்ட காவல்துறை விவசாயிகளை தாக்கும் தொழில்முறை குற்றவாளிகள் மற்றும் இவர்களை அடியாட்களாக பயன்படுத்தும் நில அபகரிப்பு கும்பல் ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினரையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் தெய்வச் செயல்புரம், பொட்டலூரணி கிராம விவசாயிகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...