நிலமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்தகளும் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத்கூடாது, ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதிக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.


ஆனால், கொரேனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கூடுதலாகி வருகின்றன. மாணவர்களும் இயல்பான மனநிலையில் இல்லை. இந்த மோசமான சூழ்நிலையில், ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பொருத்தமாக இருக்காது. நோய்ப் பரவல் அதிகரிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது.

தனிமனித விலகலோடு தேர்வை நடத்த உள்ளோம் என்று அரசு கூறினாலும் கூட, தேர்வை நடத்துவதன் மூலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நோய் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அது மட்டுமில்லாமல், தினசரி நோய்ப் பரவல் அதிகரித்து வருகிற காரணத்தால், மாணவர்களுக்கு இயல்பான தேர்வு எழுதும் மனநிலை இருக்காது.

பெற்றோர்களும் அச்சத்துடன்தான் அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டியிருக்கும்.
எனவே, ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது ஒத்தி வைக்க வேண்டுமெனவும், நிலமை சீரடைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்.

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...