நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 21வது தமிழ்நாடு மாநில மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், கே. வரதராசன், .கே.பத்மனாபன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டு தமிழகம் முழுவதிலிமிருந்து 641 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


தீர்மானம்:1

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றம் ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் இச்சட்டம் முப்போகம் விளையும் நிலங்களுக்கு விதிவிலக்கு, 80 சதவிகித விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது, நிலத்தை கையகப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்தல் போன்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா கட்சி ஆதரித்தது. தற்போது மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றவுடன், இச்சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவித விவாதமும் இல்லாமல் அவசர சட்டத்தின் மூலமாக சட்டத்தை திருத்தியுள்ளது. நாடாளுமன்றத்தை மதிக்காமல் அவசர சட்டத்தின் மூலம் இத்திருத்தத்தை அமல்படுத்தியிருப்பது பாரதீய ஜனதா கட்சியின் எதேச்சதிகார அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்திய விவசாயிகளின் நிலங்களை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளுக்கு வழங்கவே மத்திய அரசு அவசரம் காட்டுகிறது என இம்மாநாடு குற்றம் சாட்டுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894ஐ விட படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2014 மாற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான உரிமையை பறிக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அரசால் கையகப்படுத்த முடியும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு தனியார் கூட்டு திட்டங்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ஊரக வளர்ச்சி, பாதுகாப்புத்துறை, ஆகியவற்றிற்கு அரசே நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. முப்போகம் விளையும் நிலத்தையும் வேறு பயன்பாடுகளுக்கு கையகப்படுத்துவது உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விவசாயிகளின் நில உரிமையைப் பறிக்கும் இத்திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை இம்மாநாடு கோருகிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் அணி திரண்டு போராட முன்வருமாறு மாநாடு அறைகூவல் விடுக்கிறது. விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து முறியடிக்க கூட்டு போராட்டங்களை வலுப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சி எடுக்கும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டி கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: முகமது அலி

வழிமொழிந்தவ: ஐ.வி.நாகராஜன்

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...