நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு

தமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம் ஏற்கனவே இச்சட்டங்களை பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில்  நடைபெற்று வரும் 80,000 கோடி ரூபாய்  பெறுமானமுள்ள திட்டப்பணிகள் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டுள்ளன. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பாக அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மூன்று சட்டங்களையும் சட்டமன்றத்தில் முன்மொழிந்தபோதே நிறைவேற்றக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அழுத்தமாகக் குரல் கொடுக்கப்பட்டது.

இச்சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால், நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட  ரீதியான பல உரிமைகள் பறிபோய்விடும். மேலும், ஏற்கனவே நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013க்கு இத்திருத்த சட்டங்கள் விரோதமானவையாகும் என வலுவான ஆட்சேபனைகளால் பதிவு செய்தபோது அதிமுக அரசு அதைப் பொருட்படுத்தாமல் 27-2-2014 அன்று நிறைவேற்றியது. இதில் உலகமகா வேடிக்கை என்னவெனில், 27-2-2014 அன்று நிறைவேற்றப்பட்ட இச்சட்டங்களை 2014 டிசம்பர் மாதத்தில் தமிழக அரசே சட்டப்பேரவையில் வாபஸ் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றியதோடு, புதிதாக இரண்டு சட்டத்திருத்தங்களை நிறைவேற்றியது.

அப்போதும் குறுக்கிட்டு ஏற்கனவே பிப்ரவரி மாதம் இச்சட்டங்களை நிறைவேற்றும்போது எழுப்பிய அதே ஆட்சேபனைகளை மீண்டும் வலுவாக எழுப்பினோம். ஆனால், அதிமுக அரசு அவற்றைச் செவி மடுக்காமல், புதிய சட்டத்திருத்தங்களை நிறைவேற்றியது. அவற்றைப் இப்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சட்டமன்றங்களில் சட்டங்கள், திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும்போது எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் கருத்துக்களை கணக்கிலெடுத்துக் கொண்டு சட்டங்கள் நிறைவேற்றுவதே சட்டமன்றங்களின் ஜனநாயகச் செயல்பாட்டுக்கு வலு சேர்க்கும். சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதால், தானடித்த மூப்பாக ஆளும் கட்சி சட்டங்களை நிறைவேற்றுவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குமென்பதற்கு இச்சட்டத் திருத்தங்கள் எடுத்துக்காட்டாகும்.  

இது தொடர்பான விபரங்களையும் நாம் ஆராயலாம்:

1894 சட்டம் ரத்து – புதிய சட்டம்

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்ட எழுச்சிகளின் விளைவாக காங்கிரஸ் தலைமையிலான அரசு, பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றிய 1894 சட்டத்தை ரத்து செய்தது. மாறாக புதிய “நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் உரிமைச் சட்டம்” என்ற சட்டத்தை 2013ம் ஆண்டில் நிறை வேற்றியது. இந்த சட்டத்திலும் விவசாயிகளை பாதிக்கும் பல குறைகள் உண்டு. இருப்பினும் நிலம் எடுப்பதற்கு முன் விவசாயிகளது ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது போன்ற சில நல்ல அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. இச்சட்டத்தில், அரசியலமைப்பின் 4வது அட்டவணை யில் குறிப்பிட்டுள்ள 13 சட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 1956ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தினால் புதிய சட்ட விதிகள் அதை கட்டுப்படுத்தாது என்பதாகும். இதற்கென 105ம் பிரிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதிமூன்று மத்திய சட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் 105வது பிரிவினை நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் வற்புறுத்திய போது அதை ஏற்க காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது. இது மத்திய சட்டத்தில் உள்ள முக்கியமான குறைபாடாகும்.

அதிமுக அரசின் புதிய சட்ட திருத்தங்கள்

மத்திய அரசால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் 20-2-2014 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக அரசு ஒரு திருத்தச் சட்டத்தை முன் மொழிந்தது. இதன்படி விதிவிலக்கு அளித்துள்ள 105வது பிரிவோடு, 105 ஏ என்ற பிரிவை சேர்ப்பதற்கான திருத்தத்தை நிறைவேற்றியது. மத்திய சட்டத்தில் விதி விலக்கு அளிக்கப்பட்ட 13 சட்டங்களின் பட்டியலோடு (அ) தமிழ்நாடு தொழிற்சாலைகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் (ஆ)நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்தும் சட்டம், (இ)ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை (1997) சேர்த்து விட்டது அதிமுக அரசு. அதாவது இம்மூன்று சட்டங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தினால் 2013ம் ஆண்டு சட்டத்தின் ஷரத்துகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாகும்.

இத்திருத்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இச்சட்டத் திருத்தங்களை குறிப்பாக, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றினால் மத்திய அரசின் சட்டத்தால் கிடைக்கும் பலன்கள் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது; மேலும் 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டமே தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகி விடும்; மத்திய அரசின் சட்டத்திற்கு விரோதமான ஷரத்துக்க ளை அதே சட்டத்தில் உள்நுழைப்பது சட்டத்தின் அடிப்படை யையே கேள்விக்குறியாக்கி விடும் என எழுப்பினோம். தெரிவிக்கப்பட்ட கடுமையான எதிர்ப்புகளையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.  நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி சில உரிமைகளையும், நிவாரணங்களையும் பெறும் போது தமிழக விவசாயிகள் அவற்றைப் பெற முடியாமல் அதிமுக அரசு தடுத்துவிட்டது.

உலக மகா வேடிக்கை

இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் ஒரு வேடிக்கையும் நடை பெற்றது. நமது எதிர்ப்பையும் மீறி 27.2.2014 அன்று நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதற்கு பதிலாக வேறு இரண்டு திருத்தச் சட்டங்களை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் முன்மொழிந்தார்.  முதல் திருத்தச் சட்டம் என்னவென்றால், “1997ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலைகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தினால் 2013ம் ஆண்டின் சட்டப்படி நட்டஈடு வழங்குவதற்கு மட்டும் வழி செய்வதற்கான திருத்தச் சட்டமாகும்.” அதாவது நட்ட ஈடு என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் 2013 சட்ட விதிகள் இதற்கு பொருந்தாது என்பதாகும். இரண்டாவது சட்டத் திருத்தம் அதைவிட மோசமான தாகும். “2013ம் ஆண்டு சட்டத்தில் ஏற்கனவே நிலம் கைய கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி 5 ஆண்டுகள் முடியாதபட்சத்திலும் (அல்லது) அந்த விவசாயிகள் உரிய நட்ட ஈட்டினை பெறாமல் இருந்திருந்தால் – புதிய சட்டத்தின் படி தான் நிலம் கையகப்படுத்திட வேண்டும்” என்ற பிரிவு சேர்க்கப்பட்டு இருந்தது.  5 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்த போதிலும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு புதிய சட்டத்தின்படி அவர்கள் பயன்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இப்பிரிவை அதிமுக அரசு மாற்றி விட்டது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு இருந்த வாய்ப்பினை அதிமுக தட்டிப் பறித்து விட்டது. எனவே, நாடாளுமன்றத்தில் எந்த வகையான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதன் எள்ளளவு பலன் கூட தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது. அதற்கான அனைத்து வழிமுறைகளையும் துல்லியமாக சட்டத்திருத்தங்கள் மூலம் அதிமுக அரசு அடைத்துவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்குகள்

தமிழக அரசு நிறைவேற்றிய புதிய திருத்தச் சட்டங்களின் படி தமிழகம் முழுவதும் பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலநூறு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கண்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடுத்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஜூலை 3 புதனன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இத்தீர்ப்பில் தமிழக அரசு மேற்கொண்ட மூன்று சட்டத்திருத்தங்களையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு சட்டம் நிறை வேற்றப்பட்ட பின்னர் மாநில அரசு ஏற்கனவே நிறைவேற்றிய சட்டங்கள் செல்லாததாகிவிடும். இந்நிலையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களை மத்திய அரசின் சட்டத்தில் சட்டத்திருத்தமாக சேர்ப்பது சட்ட விரோதமானதாகும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய செப்டம்பர் 27, 2013க்கு பின்னர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதேசமயம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து அந்நிலங்களில் அரசின் திட்டங்கள் செயல்படும் நிகழ்வுகளில் அந்த நிலங்க ளை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அளிப்பது சாத்திய மானதல்ல என்பதால் அவர்களுக்கு முழுமையான, சட்டப்படியான நஷ்ட ஈடு மற்றும் சலுகைகளை வழங்கிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நஷ்ட ஈடு வழக்குகள் நிலுவையில் இருப்பவை மற்றும் திட்டங்கள் தொடங்கப்படாத இடங்களில் நிலங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில், பல அனல் மின் நிலையங்கள், நெடுஞ் சாலைத்துறை பணிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு குழப்பங்களுக்கும் தானடித்த மூப்பாக சட்டத்திருத்தங்களை நிறைவேற்றிய ஆளும் அதிமுகவே பொறுப்பேற்க வேண்டும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...