நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:

2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை அறிவித்தது. உண்மையில் இந்த நிதித் தொகுப்புகளும் கூட முந்தைய திட்டங்களை மறுபடியும் அறிவிக்கும் ஒன்றுதான் என்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறுமனே 1 சதவீத அளவிற்கே கூடுதல் செலவினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதித்தொகுப்பில் முக்கியமாக கடன்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்க செலவினம் அல்ல என்பதுடன், இவை எவ்விதத்திலும் நிவாரணம் அளிக்கப்போவதும் இல்லை.

அறிவிக்கப்பட்டிருக்கும் நிதித்தொகுப்பு என்பது, ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கும், அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் வாய்ப்புவாசல்களைத் திறந்து விடுவதற்கும், நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும், பொதுத்துறை நிறுவனங்களையும் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும்  அந்நிய நேரடி முதலீட்டுக்கு அகலத் திறந்து விடுவதற்குமான வரைபடமே (blueprint) ஆகும்.

இது, தொழிலாளர் நலச் சட்டங்களை மிகவும் விஷத்தனமான முறையில் தாக்குவதாக அமைந்திருக்கிறது. குறைந்தபட்சம் பத்து மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள், சமூக ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.  இவை மக்களால் உறுதியுடன் எதிர்த்து முறியடிக்கப்படும்.

சமீபத்திய அறிவிப்புகள்:

ஜூன் 1 அன்று, சில விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்டு அறிவித்தது. சென்ற ஆண்டு அறிவித்ததை விட இப்போது வெறும் 2 சதவீதம்தான் உயர்வு நெல்லுக்கும் அதேபோன்று இதர தானியங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உயர்வு, கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவினங்களை விட மிகவும் குறைவாகும். இது விவசாயிகளுக்கு எவ்விதமான தீர்வினையும் அளிப்பதற்கு மாறாக அவர்களை மேலும் கடன் வலையில் தள்ளுவதற்கே இட்டுச் செல்லும்.

அரசாங்கம் இப்போது நுண்ணிய, சிறிய, நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கு கடன்கள் வழங்குவதற்கு மேலும் சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. கடன்கள் நிவாரணமாகாது. அவர்களுக்குத் தேவை நிவாரணம்தான். முந்தைய 20 லட்சம் நிதித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி 2010இல் கடன் விகிதத்தை விடக் குறைவான விகிதத்தில் அறிவித்த 5.2 லட்சம் கோடி கடன் தொகையையும் உட்படுத்தி இருக்கிறது. ஆனாலும் அவற்றைப் பெறஎவரும் முன்வரவில்லை. எனவே வர்த்தக வங்கிகள் இதற்காகத் தாங்கள் பெற்ற தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டன.

இதைப் புரிந்து கொள்வது மிகவும் எளிது. இத்தொழில்பிரிவுகள் உற்பத்தி செய்திடும் பொருள்களை வாங்குவதற்கான சக்தி மக்களுக்குத் தேவை. அது இல்லாமல் பொருளாதாரத்தைப் புதுப்பித்திட முடியாது. கடன்கள் அளிப்பது பொருளாதாரத்தைப் புதுப்பித்திடாது. அதற்கு மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திட வேண்டும். இது நேரடியான மானி யங்கள் மூலமே நடந்திட முடியும். இதனை, மோடி அரசாங்கம், முரட்டுத்தனமான அவமதிப்புடன் செய்ய மறுக்கிறது.

பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது

கோவிட்-19 தொற்றின் தாக்கம் வருவதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான முறையில் மந்தநிலைக்குச் சென்றுவிட்டது. 2019-20க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மே 29 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகடந்த 11 ஆண்டுகளில் இருந்ததைவிட 4.2 சதவீதம் குறைவாகும். (இது,2018-19இல் 6.1 சதவீதமாக இருந்தது.) 2020 ஜனவரி – மார்ச் மாதத்திற்கான நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இதைவிட மோசம் என்று பல சர்வதேச நிறுவனங்களும், நம் நாட்டிலேயே இயங்கிடும் அமைப்புகளும் மதிப்பிட்டிருக்கின்றன. இந்தத் தரவும் மார்ச் கடைசி வாரத்தைத் தவிர சமூக ஊரடக்கு காலத்திற்கு முந்தைய காலத்திற்கானதாகும்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கும் நம் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதியை அழித்திருக்கிறது. அதன் விளைவாக நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமைகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.இவர்கள் அளித்துள்ள நிதித்தொகுப்புகளில் பெரும்பாலானவை எதார்த்தமற்றவை. மக்களுக்கு எவ்விதத்திலும் நிவாரணம் அளிக்கப்போவ தில்லை. ஏனெனில், அரசாங்கத்தின் வருவாய் வசூல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

பிப்ரவரி 2019 பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய மதிப்பீட்டின்படி, மொத்த வரி வருவாய் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகவும், கார்ப்பரேட் வரி வருவாய் 1,06,000கோடி ரூபாய்க்கும் மேலாகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உண்மையில் வசூலானதொகை என்பது மொத்த வரி வருவாயில் 7.1 சதவீதமும், கார்ப்பரேட் வரி வருவாயில் 8.8 சதவீதமுமேயாகும்.

இவ்வாறு அரசாங்க வருவாயில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில், இத்தகைய படாடோப அறிவிப்புகள் தாள்களில் மட்டுமே நீடித்திருக்கும். கடன்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பொருளாதாரத்தில் மொத்த முதலீடு மைனஸ் 6 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

மாநில அரசுகளின் நிதியிலும் தாக்குதல் அரசாங்க வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கினையும் குறைத்திடும். மாநிலங்கள்ஏற்கனவே நிதியின்றி திண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகைகள் இன்னமும் மாநிலங்களுக்கு,மத்திய அரசால் அளிக்கப்படவில்லை.

கொரோ னா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்காகவும், சமூக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளா தாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காகவும் அனைத்து மாநில அரசாங்கங்களும் நிதி உதவியினைக் கோரி வருகின்றன. எனினும் கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதில் முன்னணியில் நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு,  மத்தியஅரசு நிதி அளித்திட மறுத்து வருகிறது.

பொது சுகாதாரம்

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் நாட்டில் எந்த அளவிற்கு பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருக்கின்றன என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தையும் தனியாரிடம் தாரைவார்த்திடும் மத்திய அரசின் முயற்சிகள், பொது சுகாதார கவனத்தை அடியோடு நாசம் செய்துள்ளது.

இதன் காரணமாகவும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் அதிகரித்தன. இப்போதாவது, மத்திய அரசாங்கம், பொது சுகாதாரப் பாதுகாப்பிற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 3 சதவீதம் ஒதுக்கிட முன்வர வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு தன் கோரிக்கையை  மீண்டும் வலியுறுத்துகிறது.

இணையதளம் மூலமாகக் கல்வி

ஊரடங்கு, கல்வியாண்டு முடியும் தருவாயிலும் தேர்வுகள் தொடங்கப்படும் நேரத்திலும் வந்தது. இது மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கடுமையாக சீர்குலைத்திருக்கிறது. இது நம் நாட்டின் எதிர்காலத்தையும் சீர்குலைத்திருக்கிறது. சமூக ஊரடங்கைப் பயன்படுத்தி, மத்திய அரசாங்கம், தன்னுடைய படுபிற்போக்குத்தனமான கல்விக்கொள்கையை, நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கல்விக் கொள்கையை, இணையவழி போதனை அமைப்பு மூலமாக  அமல்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

நம்நாட்டின் கல்வி அமைப்பில் இவ்வாறு மேலிருந்து திணிக்கப்படக்கூடாது. இது, இந்தியாவின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும். கட்சி, இதனைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. அதேபோன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் காலம் காலமாக இருந்துவரும் நடைமுறையை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்பும் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும், மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளின்போதும், இணையவழி முறைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் அதன்மூலம் கல்வியாண்டு சீர்குலைக்கப்படுவதைத் தவிர்த்திடலாம். ஆனால் அதனை முழுமையாக மாற்றியமைத்திட முடியாது. இதுவும்கூட அனைத்து மாணவர்களுக்கும் சென்றடையக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

கல்வியில் இணையவழி மூலமாக  மாணவர்களைப் பிளவுபடுத்துவதை கட்சி எதிர்க்கிறது. மத்திய மாநில அரசாங்கங்கள் கல்வியாண்டை மாற்றி அமைத்திட வேண்டும். அப்போதுதான் தேர்வுகள் நடத்தப்பட முடியும். மாணவர்கள் ஓராண்டை வீணடிக்காது இருந்திட முடியும்.

அரசியல் தலைமைக்குழு

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...